கோலாலம்பூர்: அவசரநிலை அறிவிப்பு மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகியவற்றை தொடர்ந்து மாத இறுதியில் திட்டமிடப்பட்ட, அம்னோ ஆண்டு பொதுக் கூட்டம் தொடரப்படுமா இல்லையா என அம்னோ முடிவு செய்யும்.
“இன்னும் சில நாட்கள் நாம் காத்திருந்து பார்ப்போம்,” என்று அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் கூறினார்.
ஆண்டு பொதுக் கூட்டம் ஜனவரி 31- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 191 தொகுதிகளில் 189 தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றி விவாதிக்க, இந்த பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடனான ஒத்துழைப்பை நிராகரிப்பதற்கும், முவாபாக்காட் நேஷனலில் பாஸ் உடனான உறவை வலுப்படுத்துவதற்கான தீர்மானமும் அவற்றில் அடங்கும்.
கட்சியின் உயர்மட்ட தலைமை இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர் தீர்மானத்தை ஆண்டு கூட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் ஷாரில் ஹம்டான் தெரிவித்திருந்தார்.
நேற்று, மாமன்னர், சுல்தான் அப்துல்லா, கொவிட் -19 பரவுவதைத் தடுக்க அவசரகால நிலையை அறிவித்தார்.