Home One Line P2 அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை அள்ளிய அம்பானி

அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை அள்ளிய அம்பானி

731
0
SHARE
Ad

புதுடில்லி : எல்லா நதிகளும் கடலை நோக்கியே செல்கின்றன என்ற முதுமொழி, முதலீடுகள் என்ற முறையில் பார்த்தால் இந்தியாவின் முதலாவது பணக்காரர் முகேஷ் அம்பானிக்கும் பொருந்தும்.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பல பெரிய நிறுவனங்களே வருமானம் குறைந்து, இலாபம் வீழ்ச்சி அடைந்த நிலையில் முகேஷ் அம்பானியின் நிறுவனங்களே உலகெங்கிலும் இருந்து முதலீடுகளை வாரிக் குவித்தன.

குறிப்பாக அமெரிக்காவின் சிலிகோன் பள்ளத்தாக்கைத் தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, இந்தியாவிற்கான தங்களின் முதலீடுகளை முகேஷ் அம்பானியின் நிறுவனங்கள் மூலமாகவே செய்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

மொத்தமாக 27 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடுகளாக ஒரே ஆண்டில் தனது நிறுவனங்களுக்காகப் பெற்றிருக்கிறார் அம்பானி.

இதில் பாதிக்கும் மேற்பட்ட முதலீடுகள் சிலிகோன் பள்ளத்தாக்கில் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டவை.

பேஸ்புக் 5.7  பில்லியன் அமெரிக்க டாலர்களை மார்ச் மாதத்தில் வழங்க, அதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் முதலீடுகளை முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்போர்ம் நிறுவனத்தில் அள்ளிக் கொட்டின.

கூகுள் நிறுவனமும் சளைக்காமல் 4.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது.

ஜியோ பிளாட்போர்ம் 2016-இல் கைப்பேசிகளுக்கான தொலைத் தொடர்பு நிறுவனமாகத் தொடங்கியது. அம்பானியின் மிக விரிவான வணிகங்களைக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஜியோ இயங்குகிறது. தற்போது 400 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது ஜியோ.

பொழுதுபோக்கு அம்சங்களை பதிவேற்றம் செய்வது, காணொலி வழியாக கூட்டங்களை நடத்துவது, நாரிழை (பைபர்) கொண்ட அகண்ட அலைவரிசை, மின்னியல் கட்டணம் செலுத்தும் முறை ஆகிய வசதிகளோடு இன்று ஜியோ பெருவளர்ச்சி கண்டிருக்கிறது.

மிக மலிவான விலையில் இணையக் கொள்ளளவை வழங்குவதால் இந்தியர்களும் ஜியோ சேவையில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். ஜியோவை அம்பானி தொடங்கியபோது, 350 மில்லியன் இணையப் பயனர்கள் இருந்தனர். இன்றோ அந்த எண்ணிக்கை 750 மில்லியனாக உயர்ந்திருக்கிறது.

அயல் நாட்டு முதலீட்டாளர்களின் நுழைவாயிலாக அம்பானியின் ஜியோ திகழ்கிறது.