அலோர் ஸ்டார்: 15- வது பொதுத் தேர்தலில் தம்மை ஆதரிக்கப்போவதில்லை என்ற மஇகாவின் எச்சரிக்கைகள் உட்பட அதன் தலைவர்களின் அறிக்கைகளை இனிமேல் கண்டுக்கொள்ளப்போவதில்லை என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் கூறினார்.
கடந்த 14- வது பொதுத் தேர்தலில் மஇகா பாஸ் கட்சியை ஆதரிக்கவில்லை என்று அவர் கூறினார்.
மஇகாவின் பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை கூட்டணியை ஆதரித்ததாக அவர் கூறினார்.
“14-வது பொதுத் தேர்தலில் மஇகா எங்களை ஆதரிக்கவில்லை. அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களித்தனர். அதனால்தான் மஇகாவுக்கு ஒரே ஓர் இடம் மட்டுமே இருந்தது. உண்மை என்னவென்றால், மஇகாவிற்கு இந்தியரல்லாதவர்களிடமிருந்து வாக்குகள் தேவை,” என்று அவர் கூறினார்.
கொவிட் -19 நிலைமை காரணமாக இந்த ஆண்டு தைப்பூசத்தை பொது விடுமுறையாக கெடா அங்கீகரிக்காது என்று சனுசி அறிவித்ததிலிருந்து சனுசியுடனான தொடர்ச்சியான வார்த்தைப் போரில் மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஈடுபட்டுள்ளார்.
மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அளித்த அறிக்கை குறித்து சனுசி கருத்துத் தெரிவித்தபோது, அவர் இவ்வாறு கூறினார்.