கோலாலம்பூர்: கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் பல இனங்களையும் கலவையாகக் கொண்ட வாக்காளர்கள் தொகுதியில் போட்டியிடுமாறு மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.
“அவரது ஆணவத்தினால்தான், மக்கள் பாஸ் கட்சியை விட்டுவிட்டு அமானாவை உருவாக்கினார்கள். கடந்த 30 ஆண்டுகளில் மஇகாவில் எந்தவிதமான சிக்கல்களும் ஏற்படவில்லை. கடைசியாக சில பிரச்சனைகள் நிறைய வாக்காளர்களை பாதித்தது, மலாய் வாக்காளர்கள் கூட, பாரம்பரியமாக தேசிய முன்னணிக்கு தங்கள் ஆதரவை வழங்கியவர்கள், 14 -வது பொதுத் தேர்தலில் அவ்வாறு செய்யவில்லை. பாஸ் சொந்தமாக கெடாவில் அரசாங்கத்தை அமைத்தது போல், இந்த மந்திரி பெசார் மார் தட்டிக் கொள்ள வேண்டாம்,” விக்னேஸ்வரன் மலேசியாகினியிடம் கூறினார்.
மஇகா ஆதரவு இல்லாமல் பாஸ் இதுவரை மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றும் மஇகாவுக்கு சொந்தமாக தொகுதிகளை வெல்ல முடியவில்லை என்ற சனுசியின் கருத்துக்கு விக்னேஸ்வரன் பதிலளித்தார்.
சனுசியிடமிருந்து இந்த வகையான நடத்தை வாக்காளர்களை மேலும் அந்நியப்படுத்தும் என்று விக்னேஸ்வரன் கூறினார்.
“கெடா மந்திர் பெசார் போன்றவர்களின் ஆணவத்தால்தான், அமானா உருவாகி உள்ளது என்பதை என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இந்த மந்திரி பெசாருக்கு மலாய்க்காரர்கள் அல்லாத பகுதியில் நிற்க தைரியம் இல்லை. அவர் எவ்வளவு பிரபலமானவர் மற்றும் சிறந்தவர் என்பதைக் காட்ட, அனைத்து சமூக மக்கள் கொண்ட தொகுதியில் போட்டியிடுமாறு சனுசிக்கு சவால் விடுகிறேன். வாக்காளர்கள் அவரை எவ்வாறு ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறேன், ” என்று அவர் மேலும் கூறினார்.