Home அரசியல் ஷாஆலம் தொகுதியில் சுல்கிப்ளி வேட்பாளரா? பல இந்திய அமைப்புகள் போர்க்கொடி!

ஷாஆலம் தொகுதியில் சுல்கிப்ளி வேட்பாளரா? பல இந்திய அமைப்புகள் போர்க்கொடி!

575
0
SHARE
Ad

Zulkifli-Nordin-Slider--2பெட்டாலிங் ஜெயா, ஏப்.21-  ஷா ஆலாம் நாடாளுமன்ற தொகுதியில் அம்னோவுக்கு வெளியில் இருந்து தேசிய முன்னணிக்கு ஆதரவு தரும் வேட்பாளர் என்ற தகுதியோடும், தோரணையோடும் நஜிப்பால் அறிவிக்கப்பட்ட சுல்கிப்ளி நோர்டினுக்கு எதிராக நாடு முழுமையிலும் இந்திய சமுதாயத்திலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சுல்கிப்ளியை இறுதி நேரத்தில் வேட்பாளராக நிறுத்தாமல் தேசிய முன்னணி மீட்டுக் கொள்ளும் என்ற சந்தேகம் கூட நேற்று முதல் நிலவி வந்தது.

ஆனால், அவர் ஷா ஆலாம் தொகுதியில் நிற்பது இன்று வேட்பாளர் மனுத் தாக்கலின் போது உறுதியாகிவிட்டதால், நாடு முழுவதுமுள்ள இந்தியர் அமைப்புக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்து சங்கம் எதிர்ப்பு

குறிப்பாக ஷாஆலம் நாடாளுமன்றத் தொகுதியில் சுல்கிப்ளி வேட்பாளராக  நிறுத்தப்பட்டதற்குத மலேசிய இந்து சங்கம் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

அண்மையில் இந்துகளின் வழிபாட்டு முறை குறித்து விமர்சனம் செய்த சுல்கிப்ளி மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் அதனைச் செய்யாமல் அவரை ஆளுங்கட்சியின் வேட்பாளராகவே அறிவித்துள்ளதற்கு இந்து சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் எரிச்சல் அடைந்துள்ளன.

ஒட்டு மொத்த இந்துக்களும் சுல்கிப்ளி மீது வெறுப்படைந்துள்ளனர்.  இந்த கால கட்டத்தில் அவரை நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனையான விஷயம் என்று மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷான் தெரிவித்தார்.

அனைவரும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் இப்பொதுத் தேர்தலில் ஓர் இனத்தையே இழிவு படுத்தும் வகையில் பேசிய சுல்கிப்ளிக்கு வாய்ப்பு வழங்கியிருப்பது ஒட்டுமொத்த இந்துக்களின் மனத்தையும் புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக அவர் கூறினார்.

அதனால் வேட்பாளர் மனு தாக்கல் நாளான 20ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட  கட்சி அவரின் பெயரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் டத்தோ மோகன்ஷான் கோரிக்கை விடுத்திருந்தார்.

எதிர்ப்பையும் மீறி சுல்கிப்ளியை நிறுத்தியுள்ள தேசிய முன்னணி

ஆனால் அதைப் பற்றியெல்லாம் அம்னோவோ, தேசிய முன்னணியோ கொஞ்சமும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. மாறாக இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது சுல்கிப்ளி ஷா ஆலாம் நாடாளுமன்ற வேட்பாளராக தேசிய முன்னணி சார்பில் மனுத்தாக்கல் செய்தார்.

இதுவரை பலர் இந்துகளைப் பற்றியும் – இந்தியர்களைப் பற்றியும் விமர்சனம் செய்துள்ளனர். அவர்கள் மீது அரசாங்கம் எந்தவித கடுமையான நடவடிக்கையையும்  இதுவரை எடுத்ததில்லை.

அண்மையில் இந்துகளை இழிவுப்படுத்தி பேசிய சுல்கிப்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்து சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வரும் வேளையில், அவரை நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தினால் நிச்சயம் இந்தியர்களின் ஆதரவை இழக்க வேண்டியிருக்கும் என்றும் டத்தோ மோகன்ஷான் குறிப்பிட்டிருந்தார்.

வரும் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பை வழங்க வேண்டும் என்று நினைத்திருக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் சுல்கிப்ளி வேட்பாளராக நிறுத்தப்படுவது மிகவும் வேதனையான விஷயம் என்றும் டத்தோ மோகன்ஷான் தமது பத்திரிகை அறிக்கையின் வழி தெரிவித்தார்.

நஜிப் அரசாங்கத்திடம் இருந்து பல லட்சம் ரிங்கிட் மான்யம் பெற்ற இந்து ஆலயங்கள், இந்து அமைப்புக்கள், இந்தியர் அமைப்புக்கள் அந்த மான்யங்களால் வாயடைக்கப்பட்டு, கைகட்டி நின்று சுல்கிப்ளிக்கும் இப்ராகிம் அலிக்கும் பிரச்சாரம் செய்யப் போகின்றார்களா?

அல்லது,

தன்மானத்தோடு சுயகௌரவத்தை இழக்காமல், அரசாங்கத்தின் மான்யத்திற்கு மதி மயங்காமல் தேசிய முன்னணிக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை, வாக்குகளாக பதிவு செய்யப் போகின்றார்களா?

மே 5ஆம் தேதி முடிவுகள் விடை சொல்லும்!