கோலாலம்பூர்: ஜவுளி தொழிற்சாலைகள் மற்றும் ஆடை சில்லறை கடைகள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் செயல்பட அரசாங்கம் அனுமதிக்காததால், இலட்சக்கணக்கான சீன புத்தாண்டு ஆடைகள் கிடங்கில் கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய ஆடை கூட்டமைப்பு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் தொழில் செயல்பட அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் கடைகள் தங்கள் பண்டிகை சார்ந்த ஆடைகளை விற்க வாய்ப்பு கிடைக்கும் என்று அது கூறியது.
“பண்டிகை பொருட்கள் சீன புத்தாண்டுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே கடைக்கு அனுப்பப்பட வேண்டும். தற்போது, இந்த துணிகளில் பெரும்பாலானவை கடைகளில் சிக்கியுள்ளன. சில தொழிற்சாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன,” என்று அதன் தலைவர் தான் தியான் போ மலேசியாகினியிடம் கூறினார்.
சரியான நேரத்தில் ஆடை சந்தையை அடையவில்லை என்றால், சீன நாட்காடியின் மாடு ஆண்டு கருப்பொருள் ஆடை பயனீட்டாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாது. அதனால் , தொழில்துறைக்கு வருமான இழப்பு ஏற்படும் என்று அவர் கவலைப்படுகிறார்.
2020- ஆம் ஆண்டிலிருந்து தப்பிப்பிழைத்து வரும் ஜவுளித் தொழில், அதன் வருவாயை அதிகரிக்க பண்டிகை விற்பனையைப் பயன்படுத்துகிறது என்று தான் கூறினார்.