கோலாலம்பூர்: தேசிய தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் போது தினமும் 75,000 பேருக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனைக் கையாள 600 நோய்த்தடுப்பு தளங்கள் உள்ளன.
சுகாதார செய்தித்தளமான கோட் ப்ளூவுக்கு அளித்த பேட்டியில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் இது அரசாங்கத்தின் முதல் இலக்கு மட்டுமே என்றும், அடுத்தது ஒரு நாளைக்கு 150,000 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
“தடுப்பூசிகளின் செயலாக்கம் தொடர்ந்து மறுசீரமைக்கப்பட்டு சரிசெய்யப்படும். இதனால் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டு வரை ஒரு நல்ல விநியோகத்தை நாங்கள் பெற முடியும். இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் முடிந்தவரை செய்ய முயற்சிக்க விரும்புகிறோம், ” என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 27 மில்லியன் மக்களுக்கு அல்லது 80 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான இலக்கு இருக்கும் என்றும், 2022 மார்ச் மாதத்திற்குள் இதைச் செய்ய வேண்டும் என்பதே மிகவும் யதார்த்தமான இலக்கு என்றும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் 7,000 தனியார் கிளினிக்குகள் உள்ளன, ஆனால் இந்த கிளினிக்குகளுடன் மாநில அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என்றார்.