

புத்ரா ஜெயா : மலேசிய ஊடகத்துறையினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலேசிய கினி மீதான நீதித்துறை அவமதிப்பு வழக்கு மீதான தீர்ப்பை இன்று வெள்ளிக்கிழமை பிப்ரவரி 19-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் வழங்கியது.
அந்த தீர்ப்பின்படி மலேசியாகினி நீதிமன்ற அவமதிப்பு புரிந்து இருக்கிறது என நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
எனினும், மலேசியா கினியின் தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் நீதித்துறை அவமதிப்பு எதனையும் புரியவில்லை எனவும் கூட்டரசு நீதிமன்றம் குறிப்பிட்டது. இன்று தீர்ப்பு வழங்கும் போது ஸ்டீவன் கான் நீதிமன்றத்தில் இருந்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜுன் 15-ஆம் தேதி சட்டத் துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண்ட மலேசியா கினி மீதான நீதித்துறை அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து கூட்டரசு நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கியது.
21 ஆண்டுகால ஊடக வரலாற்றைக் கொண்ட மலேசிய கினி நீதிமன்ற அல்லது நீதித்துறை அவமதிப்புக்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஏழு பேர் கொண்ட கூட்டரசு நீதிபதிகளின் அமர்வு இன்றைய தீர்ப்பை வழங்கியது அந்த அமர்வுக்கு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டான்ஸ்ரீ ரோஹானா யூசோப் தலைமை வகித்தார்.
மலேசியாகினி நீதித்துறை அவமதிப்பு செய்திருக்கிறது என்றாலும், அத்தகைய வாசகர்கள் கருத்துகளை அனுமதித்ததற்காக தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் குற்றமிழைத்ததாகக் கூற முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
எழுவர் கொண்ட அமர்வின் ஒரே ஒரு நீதிபதி டத்தோ நளினி பத்மநாபன் நீதிபதிகளுக்கு முரணான, மாறுபட்ட தனது தீர்ப்பை வழங்கினார். அவர் மலேசியாகினிக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கினார்.
எனினும் பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவின்படி மலேசியாகினி நீதித்துறை அவமதிப்பு செய்ததை கூட்டரசு நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது.