சென்னை – தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில் டாக்டர் இராமதாஸ் (படம்) தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நீண்டகால கோரிக்கையான வன்னிய சமூகத்திற்கான உள் ஒதுக்கீடு வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு முன்வரைவு சட்டத்தை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
பிற்படுத்தோருக்கான 20 விழுக்காடு ஒதுக்கீட்டில் 10.5 விழுக்காடு ஒதுக்கீடு வன்னிய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக வெளியிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து அதற்கான சட்ட முன்வரைவு இன்று தமிழ் நாடு சட்டமன்றத்தில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாமக – அதிமுக இடையிலான கூட்டணி உறுதியாகியிருக்கிறது. வன்னியர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டால்தான் கூட்டணியில் இணைவோம் என மறைமுகமாக பாமக தலைவர் இராமதாஸ் பல முறை அறிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து வன்னியர்களின் வாக்குகளும் பெருமளவு பாமக வேட்பாளர்களுக்கும், அதிமுக கூட்டணிக்கும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த அரசியல் நகர்வால் தமிழ் நாட்டு வன்னிய சமூகத்தினரின் அரசியல் ஆதரவை அதிமுகவுக்கு சாதகமாகத் திருப்புவதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருக்கிறார் எனக் கருதப்படுகிறது.