கோலாலம்பூர்: கட்சியின் நிலைப்பாட்டை வலுப்படுத்தவும் தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைக்கவும் இதுவே சிறந்த தருணம் என்று தேசிய கூட்டணி தகவல் தொடர்புத் தலைவர் முகமட் அஸ்மின் அலி கூறினார்.
“எல்லோரும் தங்கள் கருத்துக்களை வழங்க முடியும், ஆனால் ஒற்றுமையை வலுப்படுத்த இதுவே சிறந்த நேரம் என்பது எனது கருத்து. ஒரு குறிப்பிட்ட தரப்பின் தனிப்பட்ட நலன்களுக்காக கட்டியெழுப்பப்பட்ட வலிமையை நாங்கள் இழக்க விரும்பவில்லை,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ வேட்பாளர்கள் பெர்சாத்துவுடன் போட்டியிட்டால், பாஸ் உதவக்கூடாது என்ற அம்னோவின் எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்தபோது அஸ்மின் இவ்வாறு கூறினார்.
இந்த எச்சரிக்கையை அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் நேற்று வெளியிட்டார்.
பெர்சாத்துவுடன் இருப்பதற்கான பாஸின் முடிவை அம்னோ மதித்தாலும், பாஸ் அம்னோவை தொடர்ந்து ஆதரிக்கும் என்று அவரது கட்சியும் நம்புகிறது என்று தாஜுடின் கூறியிருந்தார்.
அனைத்து தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பிரச்சனைக்கு தீர்வு காண விவாதிக்க வேண்டும் என்று அஸ்மின் கூறினார்.
“ஒற்றுமையை ஒழுங்கமைக்க நான் பொறுப்பேற்றுள்ளேன். பிளவுகளை ஏற்படுத்த விரும்பவில்லை. அனைத்து தரப்பினரும் தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைத்து, உட்கார்ந்து விவாதிக்க வேண்டும், ” என்று அவர் கூறினார்.