கோலாலம்பூர்: சினோவாக் கொவிட் -19 தடுப்பூசியை மார்ச் 18- ஆம் தேதி சுகாதார அமைச்சகம் தொடங்கவுள்ளது. இதனை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் முதலில் பெறுகிறார்.
தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சராக இருக்கும் கைரி இன்று செய்தியாளர் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.
“ரெம்பாவ் மருத்துவமனையில் இது தொடங்கப்படும். சினோவாக் தடுப்பூசிசை நான் முதலில் பெறுவேன்,” என்று அவர் கூறினார்.
100,000 சினோவாக் தடுப்பூசிகள் இன்று பெறப்படும் என்றும், அடுத்த 100,000 தடுப்பூசிகள் மார்ச் 22- ம் தேதி பெறப்படும் என்றும் அவர் கூறினார்.
“மேலும், 83,070 பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் இன்று பெறப்படும். மார்ச் 22 அன்று மேலும் 100,000 தடுப்பூசிகளும், மார்ச் 29 அன்று 125,190 தடுப்பூசிகளும் பெறப்படும். மார்ச் 29- க்குள், பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,000,350 -ஆக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
மார்ச் 13 நிலவரப்படி மொத்தம் 292,104 பேர் பிபைசர்-பயோஎன்டெக்கின் முதல் கட்டத்தில் பெற்றுள்ளதாக கைரி கூறினார். மைசெஜ்தெரா கொவிட் -19 தடுப்பூசி பதிவில், 1.4 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இன்னும் தடுப்பூசி பதிவை முடிக்கவில்லை என்று அவர் கூறினார்.