கோலாலம்பூர்: நாட்டின் மிகப் பெரிய பணமோசடி கும்பலின் தலைவரான, டத்தோஸ்ரீ நிக்கி லியோ சீன் ஹீ மற்றும் குழுவின் உறுப்பினர்களை வேட்டையாட ஓப்ஸ் பெலிகன் 3.0 இன் தகவலில் கசிவு ஏற்பட்டதாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
தகவல்களை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கசியவிட்டதாக அவர் கூறினார்.
“விசாரணையின் விளைவாக, தகவல் கசிவு ஏற்பட்டுள்ளது தெரிகிறது. அதனால், நிக்கி லியோ வளாகத்திலிருந்து பெரிய தொகையுடன் இடத்தை மாற்ற முடிந்தது,” என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இது தவிர, டத்தோ பட்டம் பெற்ற முன்னாள் துணை அரசு வவழக்கறிஞர் இந்த நடவடிக்கை தொடர்பான தகவல்களை கசியவிட்ட நபர்களில் ஒருவர் என்றும் நம்பப்படுகிறது.
தற்போது காவல் துறையால் தேடப்படும் நிக்கி லியோ மீது, போதைப்பொருள் மற்றும் வன்முறைக் குற்றங்கள் உட்பட 12 குற்றப் பதிவுகள் உள்ளன.
இதற்கிடையில், மொத்தம் 34 அதிகாரிகள் மற்றும் அமலாக்க உறுப்பினர்கள் இந்தக் கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை ஊழியர்கள் என்று ஹாமிட் பாடோர் கூறினார்.