கோலாலம்பூர்: தேசிய முன்னணியிலிருந்து மஇகா வெளியேறுவதை மூத்த அம்னோ தலைவர் முஸ்தபா யாகூப் வரவேற்றுள்ளார். அக்கட்சியின் இருப்பால், அதன் பிரச்சனைகள் தேசிய முன்னணியால் ஏற்கப்பட வேண்டி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கட்சி தேசிய முன்னணியிலிருந்து விலகுவதைப் பார்க்கும் அவரது கனவு நனவாகும் என்று தான் நம்புவதாக முஸ்தபா கூறினார்.
“மஇகாவின் நடவடிக்கை குறித்து நான் கவலைப்படவில்லை. அலையன்ஸ் கூட்டணி காலம் முதல் தேசிய முன்னணி வரை, அவர்கள் அம்னோவுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ளனர். மஇகா அக்கூட்டணியை விட்டு வெளியேறும் என்று நான் நம்புகிறேன். 15-வது பொதுத் தேர்தலில் மஇகாவை வெல்லக்கூடிய கூடுதல் இடங்களை தேசிய கூட்டணி ஒதுக்கட்டும்.
“மஇகாவுக்கு வழங்கப்பட்ட மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியை அம்னோ நிச்சயமாக நிரப்பும்,” என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
ஏப்ரல் 3- ஆம் தேதி, பெர்சாத்துவுடனான உறவுகளைத் துண்டிக்க அம்னோ முடிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு, பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக மஇகா அறிவித்தது.
தேசிய முன்னணி உச்சமன்றம் இது குறித்த இறுதி முடிவு எடுக்கும் வரை, இந்த நிலைப்பாடு தொடரும் என்று அதன் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.