கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிமை பிரதமராக ஆதரிப்பதாகக் கூறும் கடிதம் குறித்து, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியிடம் வினவுமாறு மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முகமட் புவாட் சர்காஷிக்கு சவால் விடுத்துள்ளார்.
தேசிய கூட்டணியுடன் மஇகா, மசீச புதிய கூட்டணியைத் தேடுவதில் அவசரப்பட வேண்டாம் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினரான புவாட் கூறியிருந்தார்.
“யார் அவசரப்படுகிறார்கள்? அன்வாருக்கு ஆதரவாக மாமன்னருக்கு கடிதம் அனுப்பியவர் யார்? அவர் தைரியமாக இருந்தால், எங்களை அவசரப்பட வேண்டாம் என்று அழைப்பதற்கு முன்பு, அன்வாருக்கு பிரதமராக ஆதரவளிக்கும் கடிதத்தை அனுப்பியது யார் என்று அவர் தனது தலைவரரிடம் கேட்க வேண்டும்.
அன்வாரை ஆதரிக்க முடிவு செய்தவரிடம் கேளுங்கள். இது தேசிய முன்னணி முடிவா அல்லது அம்னோவின் முடிவா?,” என்று அவர் எப்எம்டியிடம் கூறினார்.
பிரதமர் மொகிதின் யாசினின் நிர்வாகத்தை தற்போதைக்கு ஆதரிப்பதற்கான மஇகாவின் முடிவு அவசரமாக எடுக்கப்படவில்லை என்றும், இப்போது தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கத்துடன் இருப்பது குறித்து அம்னோ எடுத்த முடிவைப் போன்றது என்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.