Home நாடு சொக்சோ’வின் நோன்பு திறப்பு விருந்துபசரிப்பு

சொக்சோ’வின் நோன்பு திறப்பு விருந்துபசரிப்பு

1078
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பெர்கேசோ என்றழைக்கப்படும் சொக்சோவின் பயனாளிகளான தனித்து வாழும் தாய்மார்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பு ஒன்றை மனிதவள அமைச்சு நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றியபோது “இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி” எனத் தெரிவித்த சரவணன் “பெர்கேசோவின் நன்மைகளைப் பெறுபவர்களை நேரடியாக சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறியும் வாய்ப்பு இது போன்ற நிகழ்ச்சிகளில் அமையும். இன்று (ஏப்ரல் 20) நடக்கும் இந்த சமூக பொறுப்பாக விளங்கும் இந்த நிறுவனங்களுக்கான சமூகக் கடப்பாட்டு திட்டம் (Corporate Social Responsbility – CSR) சிறந்த திட்டம் மட்டுமல்ல பெர்கேசோவை மக்களுடன் இணைக்கும் ஒரு பாலமாகவும் அமையும்” என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

“கொரோனாவின் பாதிப்பால் சுகாதாரப் பிரச்சனை மட்டுமல்லாமல், பொருளாதாரப் பிரச்சனையையும் நாம் எதிர்கொள்கிறோம். அதனை எதிர்கொள்ள மனிதவள அமைச்சு இடைவிடாது பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோ பல்வேறு அரசு முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது” எனவும் சரவணன் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக , சம்பள உதவித் திட்டம், ஊதிய ஊக்குவிப்புத் தொகை, வேலை வாய்ப்புத் திட்டங்கள், பெஞ்சானா Gig, சுயதொழில் சமூக பாதுகாப்பு மற்றும் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட சுய தொழில் செய்யும் பெண்களுக்கான SPS Prihatin Wanita ஆகியவற்றை சில உதாரணங்களாக சரவணன் சுட்டிக் காட்டினார்.

“இதற்கிடையில் வழக்கமான பெர்கேசோவின் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. மேலும் சுயதொழில், வெளிநாட்டவர் மற்றும் பல முறைசாரா தொழில்களுக்கும் இந்த உதவிகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவின் பாதிப்பால் வேலையிழந்து சொந்தமாக தொழில்/ சுய வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு, சுய தொழில் செய்பவருக்கான சமூக பாதுகாப்பு திட்டத்தை (Skim Keselamatan Sosial Pekerjaan Sendiri (SKSPS) PERKESO) அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது” என்றும் சரவணன் கூறினார்.

2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 24 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு பெர்கேசோவுக்கு செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் வழி 100,000 பேர்களுக்கு ஒரு வருடத்திற்கான முழு பங்களிப்பை அரசாங்கம் வழங்கும் என்றும் இதில் 40,000 பேர் பொருள் விநியோகிப்பாளர்கள் (delivery riders) ஆவர் என்றும் சரவணன் தெரிவித்தார்.

எனவே, சுய தொழில் செய்யும் அனைவரும் உடனடியாக இதில் பதிந்து கொள்ள வேண்டும் என்றும் சரவணன் கேட்டுக் கொண்டார்.

“எடுத்துக் காட்டாக 20 வயது பொருள் விநியோகிப்பாளரான ஒருவர் இடி, மழையின் காரணத்தால் மரம் விழுந்து இறந்தார். ஆனால் அவர் சொக்சோ பங்களிப்பைச் செலுத்தாதவர் என்பது வருத்தமான செய்தி. சுய தொழில் செய்யும் பெண்களும் SPS Prihatin Wanita திட்டத்தில் பதிந்து கொள்ள வேண்டும். இதற்காக 10 மில்லியன் ரிங்கிட், மக்களையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் திட்டத்தில் (PEMERKASA) ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும் சரவணன் குறிப்பிட்டார்.

தனதுரையில் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் சரவணன் வெளியிட்டார். ஊழியர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 மற்றும் வேலை காப்பீட்டுச் சட்டம் 2017 இன் கீழ் வீட்டைப் பராமரிப்பவர்களுக்கு (இல்லத்தரசிகள், பணிப்பெண்கள், கார் ஓட்டுநர்கள், தோட்ட வேலை செய்பவர்கள்) சமூகப் பாதுகாப்பு வழங்கப்படும் என்பதுதான் அது. இந்தத் திட்டம் ஜுன் 1, 2021, முதல் அமலுக்கு வரும். அதன் மூலம்  1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைவர்.

பெர்கேசோ பொன்விழா கொண்டாடும் இந்த ஆண்டில் இனம், மொழி, மதம் கடந்து மக்களின் நலன் காக்கும் சமூக பாதுகாப்பை வழங்கும், அனைவரின் வீட்டிலும் உச்சரிக்கப்படும் பெயராக மாற வேண்டும் என்பதே எனது எண்ணம் என்ற தனது எண்ணத்தையும் சரவணன் தனதுரையில் வெளிப்படுத்தினார்.