சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் திகழ்ந்த கே.வி.ஆனந்த் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30) அதிகாலை 3.00 மணியளவில் காலமானார்.
இருதயக் கோளாறுகள் காரணமாக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று அனுமதிக்கப்பட்டார். கொரொனா தொற்று காரணமாகவும் அவர் சிகிச்சை பெற்று வந்தார் என ஊடகங்கள் தெரிவித்தன. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 54.
கரிமணல் வெங்கடேசன் ஆனந்த் என்ற முழுப் பெயர் கொண்ட அவர் புகைப்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர். ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தொடக்கத்தில் பணியாற்றினார். பின்னர் ஒளிப்பதிவுத் துறையில் ஆர்வம் கொண்டு திரையுலகில் நுழைந்தார்.
பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராகப் பல படங்களில் பணியாற்றியவர் முதன் முதலாக “தேன்மாவின் கொம்பத்து” என்ற மலையாளப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். மோகன்லால் நடித்த அந்தப் படத்தின் மூலம் முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றார் ஆனந்த்.
தமிழில் ஒளிப்பதிவாளராக ஆனந்த் பணியாற்றிய முதல் படம் “காதல் தேசம்”.
பின்னர் தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கருடன் இணைந்து பணியாற்றினார். பாய்ஸ், முதல்வன், சிவாஜி ஆகிய படங்கள் ஷங்கர் – ஆனந்த் கூட்டணியில் வெளிவந்து வெற்றி கண்ட படங்களாகும்.
ஒளிப்பதிவுத் துறையில் சிறந்து விளங்கிய அதே தருணத்தில் தனியாக திரைப்படங்களை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார் ஆனந்த். அதைத் தொடர்ந்து “கனா கண்டேன்” என்ற படத்தை முதன் முதலாக இயக்கினார். பிரித்விராஜ் நடித்த அந்தப் படம் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து ஆனந்தின் இயக்கத்தில் அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் போன்ற படங்கள் வெளிவந்தன.
கமல் ஹாசன் அஞ்சலி
“பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி” என கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
வைரமுத்துவின் கவிதாஞ்சலி
கவிஞர் வைரமுத்து ஆனந்தின் மறைவுக்கு கீழ்க்காணும் கவிதையைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அஞ்சலி செலுத்தினார்:
வருந்துகிறேன் நண்பா!
திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!
வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!
என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!
இதோ
உனக்கான இரங்கல் பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?
விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!
ஒளியாய் வாழ்வாய்
இனி நீ.