மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணனின் தொழிலாளர் தினச் செய்தி
முதற்கண் தங்களது கடின உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் தொழிலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தொழிலாளர் தின வாழ்த்துகள்.
தற்போதைய சர்வதேச பரவலைக் கருத்தில் கொண்டு “உலகளாவிய நிலையில் பணியிடங்களில் புதிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போம்” என்பதே இந்த வருட தொழிலாளர் தினக் கருப்பொருளாகும்.
கொரோனாவின் பாதிப்பால் சுகாதாரப் பிரச்சனை மட்டுமன்றி, பொருளாதாரப் பிரச்சனையும் உலகளவில் இருந்து வருவது நமக்குத் தெரிந்த ஒன்றே. 2020ஆம் ஆண்டின் இறுதியில், தேசிய அளவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 4.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அரசாங்கத்தின் இடைவிடாத முயற்சிகளால் இந்த வேலையில்லாதோர் விகிதம் 4.2 ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தொழிலாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. இது போன்ற சிக்கலான தருணங்களில் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்படுத்த தொழிலாளர்களின் பங்கு அத்தியாவசியமானது.
எனவே தொழிலாளர்கள் தங்களின் பாதுகாப்பு, சுகாதாரம் சம்பந்தப்பட்ட விடயங்களில் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. அதனை முன்னிட்டு மனிதவள அமைச்சு சில திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
மனிதவள அமைச்சின் பிரதான கடமையாக சட்டம் 446ஐ உள்ளடக்கிய வீட்டுவசதி, தங்குமிடம் மற்றும் ஊழியர் வசதிகள் மீதான குறைந்தபட்ச வசதிகளை ஒவ்வொரு நிறுவனமும் கொண்டிருத்தல் அவசியம்.
இதைத் தொடர்ந்து மனிதவள அமைச்சின் முயற்சியில் தொழிலிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் JKKP எனப்படும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலையம் உருவாக்கிவரும், 2021-2025-க்கான தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார முழுமைத் திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது. பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணியிட சூழலை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டம் உருவாகிவருகிறது.
தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உரிமைகள் எப்போதும் பாதுகாக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.
தொழிலாளர்களும், முதலாளிகளும் ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதை நாம் உணர வேண்டும். தொழில்துறைகளுக்கு இடையிலான இணக்கமான உறவுகள் ஒரு நாட்டின் வெற்றியை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை.
சர்வதேச பரவலினால் சிலர் வருமானத்தையும், சிலர் வேலையையும் இழந்துள்ளதை நாங்கள் உணர்ந்துள்ளோம். 2020இல் பெர்கேசோவின் வேலைவாய்ப்புக் காப்புறுதித் திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலையிழந்தவர்களுக்குக் காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 136,396 வேலையியழந்தவர்கள் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
பெர்கேசோவின் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஊதிய மானியத் திட்டம், 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நிறுவனங்கள் மூடாமல் இருக்கவும், பணிநீக்கங்களைத் தவிர்க்கவும் மனிதவள அமைச்சின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
சுயதொழில் செய்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுய வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், சுயதொழில் செய்பவர்களுக்கும் சொக்சோ பாதுகாப்பு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மனிதவள அமைச்சின் மற்றொரு முயற்சியாக இலக்கை நிர்ணயிக்கும் வேலை வாய்ப்புகள், திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள், மறுபயன்பாட்டுத் திட்டங்கள் மற்றும் இயங்கலைப் பயிற்சிகள் என பலவேறு திட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.
HRD Corp எனப்படும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் e-Latih எனப்படும் இயங்கலை வழி கற்றல் மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய தொழில் துறைகளுக்குத் தேவையான 200க்கும் மேற்பட்ட பயிற்சிகள் இதில் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஏப்ரல் 2021 வரை 61,319 பேர் பதிந்து கொண்டு, 74,304 பயிற்சிகளைக் கற்றுள்ளனர்.
மேலும் நவம்பர் 2020-இல் தேசிய வேலைவாய்ப்பு மன்றம், புதிய வேலைகளை உருவாக்குவதற்கும், இருக்கும் வேலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 500,000 புதிய வேலைகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
அண்மையில் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் HPC எனப்படும் வேலைவாய்ப்புக்கான தளத்தை அறிமுகம் செய்துள்ளது. முதலாளிகள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கிடையில் ஒரு பாலமாக இந்த தளம் விளங்கும். 2021-இல் 50,000 வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது இந்த சேவைத்தளம்.
இது தவிர பெர்கேசோ மற்றும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மூலமாக நாடு தழுவிய நிலையில் வேலைக்கான கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் PPR எனப்படும் மக்கள் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குமான வேலை வாய்ப்புக் கண்காட்சிகளும் அடங்கும்.
எனவே தயவு செய்து வேலையிழந்தவர்களும், வேலை தேடுபவர்களும் MyFutureJobs இணையத்தளத்தில் பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அதே சமயம் தகவல் தெரிந்த சமுதாயமாகவும் நாம் இருக்க வேண்டும். நிகழ்கால மாற்றங்களையும், எதிர்கால சவால்களையும் நாம் உணர்ந்திருக்க வேண்டும்.
ஆக என் அன்புக்குரிய தொழிலாளர்களே,
நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்த அனைத்து முயற்சிகளின் வழி புதிய நடைமுறைகளோடு பணியிடத்தில் நாம் வெற்றி காண்போம்.
ஒட்டுமொத்த மலேசியர்களின் எதிர்காலத்திற்கான, அரசாங்கத்தின் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை வெற்றிபெறச் செய்வதில், தொழிலாளர் வர்கத்தின் தியாகங்களையும், பங்களிப்புகளையும் நினைவு கூர்ந்து நன்றிகளையும், வாழ்த்துகளையும் கூறிக்கொள்கிறேன்.
இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள்
உலகளாவிய நிலையில் பணியிடங்களில் புதிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போம்.
புதிய தொழில்நுட்பத்தை நோக்கிப் பீடுநடை போடுவோம்
மக்கள்நலன் பேணும் மனிதவள அமைச்சு
உங்கள் நலன்பேணும் உங்களில் ஒருவன்
நன்றி வணக்கம்