Home நாடு “தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்” – விக்னேஸ்வரன்

“தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்” – விக்னேஸ்வரன்

480
0
SHARE
Ad

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி

உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எனது தொழிலாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு நமது நாட்டில் மட்டுமின்றி உலகம் எங்கிலும் உள்ள எல்லாத் தொழிலாளர்களுக்கும் சோதனையான காலகட்டமாகும். கொவிட்-19 தொற்றுகளின் தாக்கத்தால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டோம்.

பலர் தங்களின் வேலைகளை இழக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பலரின் வருமானம் குறைந்தது. தொழில்கள், வணிகங்கள் முடங்கின. இருப்பினும் நமது அரசாங்கமும் பல முனைகளில் தொழிலாளர்களின் குறைகளைத் தீர்க்கப் பாடுபட்டது. உதவி நிதிகள் வழங்கியது. புதிய மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியது.

#TamilSchoolmychoice

மஇகாவும் தனது பங்குக்கு களத்தில் இறங்கி இந்திய சமூகத்திற்கு பல உதவிகள் செய்தது. கொவிட் தொற்றால், இந்தியா போன்ற நாடுகளில் சிக்கிக் கொண்ட ஆயிரக்கணக்கான மலேசியர்களை இன, மத பாகுபாடின்றி, கட்சி செலவிலும், சில நல்ல உள்ளங்களின் ஆதரவோடும் சிறப்பு விமானங்கள் மூலம் நாட்டுக்கு திரும்பவும் கொண்டு வந்து அவர்களின் குடும்பத்தினரோடு சேர்க்க மஇகா உதவியது.

பல வட்டாரங்களில் தேவைப்படுவோருக்கு உணவுப் பொருட்களுடன் கூடிய அத்தியாவசியப் பொருட்களை நமது உள்ளூர் மஇகா கிளைகள் மூலம் வழங்கினோம்.

தற்போது, கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் அடுத்த கட்ட முயற்சியாக தடுப்பூசிகளைச் செலுத்தும் திட்டத்தை அரசாங்கம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் நோயின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என நம்பிக்கையோடு அனைவரும் இணைந்து செயல்படுவோம். நடமாட்டக் கட்டுப்பாட்டு நிபந்தனைகளையும், சுகாதார அமைச்சின் ஆலோசனைகளையும் தவறாது பின்பற்றுவோம்.

தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் உழைப்பே அவர்களின் மூலதனம். அதன் மூலமே அவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக உயர முடியும்.

எந்தத் தொழிலைச் செய்பவராக இருந்தாலும், அவரையும் அவர் செய்யும் தொழிலையும் நாம் மதிக்க வேண்டும். கௌரவிக்க வேண்டும்.

எந்தத் தொழிலையும் நாம் தாழ்வாகவோ, தரக் குறைவாகவோப் பார்க்கக் கூடாது. இன்றைக்கு உலகில் உள்ள செல்வச் செழிப்புகள் அனைத்தும் பலதரப்பட்ட தொழிலாளர்களின் கடுமையான உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவானது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இன்றைக்கு நமது இந்திய சமூகத்தில் பலர் செல்வச் செழிப்போடும், பல வசதிகளோடும், உயர்ந்த தொழில் நிபுணர்களாகவும் இருக்கலாம். ஆனால் அதற்கான அடிப்படைக் காரணம் நமது மூதாதையர்கள் சாதாரண தொழிலாளர்களாக, இரப்பர் தோட்டங்களிலும், துப்புரவுத் துறைகளிலும் வழங்கிய உழைப்புதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நாட்டிலுள்ள தொழிலாளர் சமூகத்தின், குறிப்பாக இந்திய சமுதாயத் தொழிலாளர்களின் நலன்களை மஇகா, அரசாங்கத்தின் உதவியோடு தொடர்ந்து பாதுகாக்கும். அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கும்.  அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் எனவும் இந்த தொழிலாளர் தினத்தில் உறுதி கூறுகிறேன்.