Home நாடு அடுத்த காவல் துறைத் துணைத் தலைவர் யார்?

அடுத்த காவல் துறைத் துணைத் தலைவர் யார்?

518
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நடப்பு காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ ஹாமிட் பாடோர் (படம்) பதவி விலகிச் செல்லும் நிலையில் புதிய காவல் துறைத் தலைவராக அக்ரில் சானி மே 4-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

அதைத் தொடர்ந்து காவல் துறையின் துணைத் தலைவர் பொறுப்புக்கு யார் வருவார் என்ற ஆர்வம் அனைத்துத் தரப்புகளிலும் எழுந்துள்ளது. பொதுவாக காவல் துறையின் துணைத் தலைவராக வருபவரே பின்னர் தலைவராகவும் பொறுப்பேற்பார். இதுதான் வழக்கமான நடைமுறையாகும்.

எனவேதான், புதிய காவல்துறைத் துணைத் தலைவராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

#TamilSchoolmychoice

அதிலும் நாட்டில் குழப்பமான அரசியல் சூழ்நிலைகள் நிலவி வரும் வேளையில் காவல் துறையின் தலைமைப் பொறுப்புகளுக்கான நியமனங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30) பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி ஹாமிட் பாடோர், யார் அடுத்து காவல் துறைத் துணைத் தலைவராக வரக்கூடும் என்பது குறித்து கோடி காட்டினார்.

டத்தோ சாம்ரி யாஹ்யா, டத்தோ ரம்லி டின், டத்தோ ரசாருடின் ஹூசேன் ஆகிய மூவரில் ஒருவர் அடுத்த காவல் துறை துணைத் தலைவராக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

சாம்ரி யாஹ்யா, நேர்மை மற்றும் தரக் கட்டுப்பாட்டு இலாகாவின் இயக்குநராகத் தற்போது பொறுப்பில் இருக்கிறார். நிருவாக இலாகாவின் இயக்குநராக ரம்லி டின் பணியாற்றுகிறார். ரசாருடின் ஹூசேன் தேசிய போதைப் பொருள் புலனாய்வு இலாகாவின் இயக்குநராகத் தற்போது பொறுப்பில் இருக்கிறார்.

“இவர்கள் மூவரும்தான் தற்போது மூத்த ஆணையர்கள். இவர்களில் ஒருவர்தான் அடுத்த துணைத் தலைவராக வர வாய்ப்பிருக்கிறது. யாரை நியமிப்பது என்பது பிரதமரைப் பொறுத்தது” எனவும் ஹாமிட் பாடோர் கூறினார்.