சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) காலை 9.00 மணிக்கு முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின், பல்வேறு இடங்களுக்கு வருகை தந்த பின்னர், தமிழக அரசு செயலகம் சென்று அங்கு 5 முக்கியக் கோப்புகளில் முதன் முதலாக கையெழுத்திட்டுள்ளார்.
அந்தக் கோப்புகளின் விவரங்களும் வெளியிடப்பட்டன.
ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து கொரொனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகும். அனைத்து ரேஷன் அரிசி அட்டைகளைக் கொண்டிருப்பவர்களும் முதல் கட்டமாக 2 ஆயிரம் ரூபாயும், பின்னர் இரண்டாவது கட்டமாக 2 ஆயிரம் ரூபாயும் பெறுவர்.
ஸ்டாலின் கையெழுத்திட்ட இரண்டாவது கோப்பு ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் விலைக் குறைப்பு செய்யும் உத்தரவாகும்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் – பணிபுரியும் மகளிர், மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் நாளை முதல் இலவசமாகப் பயணம் செய்ய வழிவகுக்கும் உத்தரவைக் கொண்ட மூன்றாவது கோப்பில் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
4-வதாக ஸ்டாலின் கையெழுத்திட்ட கோப்பு “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் செயல்பாடாகும். மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பான மனுக்களை தேர்தல் பிரச்சாரத்தின் போது பெற்ற ஸ்டாலின் அந்த மனுக்கள் மீது முதலமைச்சரானதும் 100 நாட்களில் தீர்வு காண்பேன் என வாக்களித்திருந்தார்.
அதற்காக, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தை செயல்படுத்த புதிய துறையை உருவாக்கி இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணையில் ஸ்டாலின் கையெழுத்திட்டமே 4-வது கோப்பாகும்.
5-வதாக ஸ்டாலின் கையெழுத்திட்ட கோப்பு கொரொனோ தொற்று தொடர்பானதாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வண்ணம், அவர்களுக்கான சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்க ஸ்டாலின் உத்தரவிட்டதுதான் அவர் கையெழுத்திட்ட 5-வது கோப்பாகும்.
இந்திய நேரப்படி பிற்பகல் 4.00 மணிக்கு தமிழ் நாடு அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமையேற்கவுள்ளார்.
முதலமைச்சராகப் பதவியேற்றதும் தொடங்கிய பயணம்…
முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் உடனடியாக தனது தந்தையார் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இல்லமும், தான் பிறந்து வளர்ந்த இல்லமுமான கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்தார்.
அதைத் தொடர்ந்து அவர் கோபாலபுரத்திலிருந்து புறப்பட்டு சென்னை மரினா கடற்கரைக்கு சென்று தனது தந்தையாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்திய பின்னர், பெரியார் நினைவிடம் சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஸ்டாலினின் அரசியல் பயணத்தில் மிகுந்த முக்கியத்துவம் வகித்தவருமான பேராசிரியர் க.அன்பழகன் இல்லத்திற்கு சென்றார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்து பேராசிரியரின் இல்லம் சென்று அவரின் குடும்பத்தினரிடம் நல்லாசி பெற்றார் ஸ்டாலின்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கருணாநிதியின் இரண்டாவது மனைவியும், கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளைச் சந்திக்க சி.ஐ.டி காலனியில் உள்ள அவரின் இல்லத்திற்கு சென்றார்.
கருணாநிதி அவரின் வாழ்நாளின்போது பெரும்பாலும் தங்கியிருந்த இல்லமாக சி.ஐ.டி காலனியில் உள்ள இராஜாத்தி அம்மாளின் இல்லம் திகழ்ந்தது.
பதவியேற்றது முதல் மிக முக்கியமான இடங்களுக்கு வருகை தந்த ஸ்டாலினின் நிகழ்ச்சி நிரல் அனைத்துத் தரப்பினரையும் கவர்வதாக அமைந்திருக்கிறது.