அன்னையர் தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் அன்னையர் தினத்தில் அனைத்துத் தாய்மார்களுக்கும், மகளிருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தாய்மை என்பது இறைவனின் படைப்பிலேயே மிகச் சிறந்த அம்சமாகப் பார்க்கப்படுகிறது. மனித குலத்தில் மட்டுமின்றி விலங்குகளிடத்தில் கூட தாய்மையின் பாசம் நிறைந்து கிடப்பதை நம்மால் காண முடிகிறது.
இந்த மண்ணில் பிறந்ததும் நாம் காணும் முதல் கடவுள் நமது தாயார்தான். அவர்தான் நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற பின்னரும் இரவு பகல் பாராமல் கண்விழித்து பாலூட்டி நம்மைப் பாதுகாக்கிறார். வளர்க்கிறார். உணவுகள் அளிக்கிறார். பள்ளிக்கு நாம் செல்வதையும் கல்வி கற்பதையும் உறுதி செய்கிறார். நல்ல பண்புகளை, பழக்க வழக்கங்களைக் கற்றுத் தருகிறார்.
நமது வாழ்க்கையில் தந்தைக்கும் முக்கிய இடம் உண்டு என்றாலும் அது ஒரு தாயாருக்கு ஈடாக முடியாது என்பதை தந்தையர்களே ஒப்புக்கொள்வார்கள்.
இவ்வாறு நமக்கு அன்பும், நல்ல பண்புகளும் சொல்லித் தந்து வளர்க்கும் அன்னையரை அவர்களின் இறுதிக் காலத்தில் கவனிக்காமல் கைவிடும் போக்கு மெல்ல மெல்ல நமது நாட்டிலும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இந்திய சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவங்களும், தாயாரை இறுதிக் காலத்தில் முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கும் அவலங்களுக்கும் நேர்கின்றன.
இதற்காக எத்தகைய நியாயமான காரணங்கள் சொல்லப்பட்டாலும், அத்தகைய நிலைமையை தங்களின் தாயாருக்கு ஏற்படுத்த மாட்டோம் என ஒவ்வொருவரும் இந்த அன்னையர் தினத்தில் உறுதிபூண வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இந்தியப் பாரம்பரியத்தில் தாய்மைக்கும், தாயாருக்கும் வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமும், பெருமைகளும் ஏராளம். பெரும் தலைவர்கள், பிரபலமான மனிதர்கள் பலரும் தங்களின் தாயாரை தெய்வமாகக் கொண்டாடியவர்கள்தான். தாயைப் போற்றியதால்தான், அவரின் ஆசியால்தான் தாங்கள் வாழ்க்கையில் உயர் நிலையை அடைந்தோம் என அவர்களே பல தருணங்களில் பெருமையுடன் கூறியிருக்கிறார்கள்.
நமது இந்திய சமுதாயத்தின் பரவலான வளர்ச்சிக்கு தாயார்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. நமது மூதாதையர்கள் சஞ்சிக் கூலிகளாக வந்த காலத்தில் கூட, நம் சமூகத்தின் தாய்மார்கள், இரப்பர் மரம் வெட்டியும், காடு மேடுகளைத் திருத்தியும் வேலை செய்து தங்களின் பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. அதன் தொடர்ச்சியாகத்தான் நமது இன்றைய சமூகத்தில் பலர் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.
நமது இலக்கியங்களும், புராணங்களும் கூட தாய்மை குறித்த ஏராளமான கருத்துகளையும், கதைகளையும் நமக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.
இப்படியாகப் பல்வேறு பெருமைகளுக்குரிய அன்னையைப் போற்றி வணங்குவோம். அவர்களுக்கு உரிய மரியாதைகளை வழங்குவோம். அவர்களின் தியாகங்களை நினைவு கூர்வோம். எவ்வளவு சிரமத்திற்கிடையிலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம். அப்போதுதான் அவர்களின் நல்லாசியால் நமது வாழ்க்கையும் செழிப்பாக உயரும் என்பதை நினைவில் கொள்வோம்.
அனைத்து தாய்மார்களுக்கும், எனது நன்றி கலந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள்.