Home நாடு “ஒரு நாள் மட்டுமல்ல! தினந்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர் அன்னை” – சரவணன்

“ஒரு நாள் மட்டுமல்ல! தினந்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர் அன்னை” – சரவணன்

611
0
SHARE
Ad

அன்னையர் தினத்தை முன்னிட்டு மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய வாழ்த்துச் செய்தி

உலகளவில் அன்னையர் தினத்தை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்துத் தாய்மார்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள். ஆயிரம் உறவுகள் அவனியில் இருந்தாலும் அன்னை உறவுக்கு இவ்வுலகில் ஈடு இணையில்லை.

என்றுமே தன்னலம் பாராது மற்றவர்களின் நலனை மட்டுமே சிந்தையில் நிறுத்தி ஓயாது உழைக்கும் தியாக உள்ளங்கள் கொண்டவர்கள்தான் தாய்மார்கள். அன்னை, அம்மா, தாய், மாதா என பல பெயர்கள் கொண்டிருக்கும் தாய்மார்கள் அன்பு, பாசம், கனிவு, அக்கறை, தியாகம் இதன் மறு உருவம் என்பதே சரியாக இருக்கும்.

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே”

#TamilSchoolmychoice

என்ற வரிகள் ஒரு தாயின் பொறுப்பையும், கடமையையும் உணர்த்துகின்றன. இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. அந்தக் கலையை கண்டு, கேட்டு, உணர்ந்து ஒவ்வொரு தாய்மார்களும் தங்களது குழந்தைகளை வளர்க்க வேண்டும். அவர்கள் வளர்ப்பது தங்களது குழந்தைகளை மட்டுமல்ல நாளைய சமுதாயத்தை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்று தனித்து வாழும் தாய்மார்கள் பெருகி வரும் சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது யதார்த்தமான ஒன்றாக அமையவில்லை. உடலும், மனதும் வலிமை நிறைந்தாக இருக்க வேண்டும். தந்தை, தாய் இருவரின் பொறுப்பையும் ஒரு சேர தோளில் சுமக்கும் தாய்மார்களுக்குச் சமுதாயம் பக்கபலமாக இருக்க வேண்டும். உறவினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

மனிதவள அமைச்சின் கீழ் பெண்களுக்குக் குறிப்பாக சுய வேலை செய்யும் பெண்களுக்குப் பிரத்தியேகமான சமூக பாதுகாப்பைப் பெர்கேசோ வழி ஏற்படுத்தியுள்ளோம். மக்களையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் பெமெர்காசா எனும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் சுய தொழில் செய்யும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டம் இது. எனவே சுய தொழில் செய்யும் பெண்கள் இத்திட்டத்தில் அருகிலுள்ள பெர்கேசோ அலுவலகங்களுக்குச் சென்று பதிந்து கொள்ள வேண்டும்.

இந்த வேளையில் தாயுள்ளத்தோடு கொரோனா நோயாளிகளைப் பார்க்கும் மருத்துவர்கள், தாதியர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒருவரை தாய்மை உள்ளத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் தங்களது உயிரைப் பணயம் வைத்து கவனித்துக் கொள்ளும் முன்களப் பணியாளர்களும் அன்னையரே.

அர்ப்பணிப்பு, தியாக உணர்வோடு வளர்க்கும் தாய்மார்கள் பின்னாளில் ஆதரவற்ற இல்லங்களில் தஞ்சமடைவதுதான் கொடுமையான விஷயம். இந்த ஒரு நாள் மட்டும் அன்னையர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல. இந்த புனித நாளில் இனி ஒரு தாய்மாரும் ஆதரவற்ற இல்லங்களுக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்வேன் என்று ஒவ்வொரு பிள்ளைகளும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய நிலை விரைவில் மாறக் கூடும். மனம் சோர்வடையாமல், சுபீட்சமான எதிர்காலத்தை மனதில் நிறுத்தி நமது கடமையைச் செய்வோம்.

மீண்டும் அன்னையர் தின வாழ்த்துகளுடன்

அன்புடன்,

டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்
மனிதவள அமைச்சர்,
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்