கோலாலம்பூர்: எல்ஆர்டி இரயில் மோதிய விபத்தில் காயமடைந்த 213 பேருக்கும் பிரசாரனா மலேசியா பெர்ஹாட் ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்குவதாக அதன் தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
64 பயணிகள் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். 21 பேர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மூன்று பேர் சுவாசக் கருவி உதவியுடன் இருக்கிறார்கள். அரை ஆபத்தான நிலையில் 15 நோயாளிகளும் இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் மருத்துவ செலவுகளையும் அவர்கள் வெளியேறும் வரை பிரசரணா ஈடுசெய்யும் என்றும் தாஜுடின் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
நடந்த சம்பவத்திற்காக வருத்தப்படுவதாகவும், பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும், இது குறித்து விசாரணைகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
“இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இரண்டு வார காலத்திற்குள் முடிக்கப்படும். இது எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விபத்து,” என்று அவர் கூறினார்.
“எங்கள் சேவைகள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம். எங்கள் சேவை பாதுகாப்பானது அல்ல என்று நீங்கள் கூற முடியாது. இது முதல் சம்பவம். பாதுகாப்பு நிலைகளை பராமரிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், ” என்ரு தாஜுடின் கூறினார்.