Home நாடு “கொவிட்-19 ஒழிப்புக்கு, ஒருமைப்பாட்டு அரசாங்கமே தீர்வு” – டான்ஸ்ரீ குமரன்

“கொவிட்-19 ஒழிப்புக்கு, ஒருமைப்பாட்டு அரசாங்கமே தீர்வு” – டான்ஸ்ரீ குமரன்

824
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் நாளுக்கு நாள் பெருகிவரும் கொவிட் – 19 நோய் தொற்றும், அதிகரித்துவரும் இறப்பு எண்ணிக்கையும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக டான்ஸ்ரீ க.குமரன் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், முன்னாள் சுகாதார துணையமைச்சருமான குமரன், “நோய் தொற்று பரவுவதைத் தடுக்க அரசங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் தங்கள் பிளவுபடாத ஒத்துழப்பை வழங்குவதுடன் மக்கள் நலன் கருதி அரசாங்கம் விதித்திருக்கும் நடமாட்ட கட்டுபாடுகளைப் பின்பற்றி நம்மை, நம் குடும்பத்தை, நாட்டைக் காத்துக் கொள்ளும் வகையில் மக்கள் அரசாங்கதிற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்றுமு தெரிவித்தார்.

“கட்சி, அரசியல், இனம் சமயம், நாடு என்ற எல்லைக்குள் நில்லாமல் உலகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கோவிட்-19 பிரச்சனையை அணுகுவதில் அரசாங்கம் மெத்தனம் காட்டாமல் நாட்டு மக்களை அணைத்துக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும்” என்றும் குமரன் தனதறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

“ஊடகச் செய்திகளைப் பார்க்கும்போது, நகர்ப்புற மக்களைவிட, புறநகர் மக்களில் பெரும்போலோர் இந்நோய் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது. சென்ற மாதத்தில் குறிப்பாக , ஒரு மாநிலத்தில் தடுப்பூசி போட பதிந்து கொண்டவர்களில் 10,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வரவில்லை என்றும் பல மாநிலங்களில் பலர் குறிப்பிட்ட நாளில் தடுப்பூசிபோட்டுக்கொள்ள வரத் தவறிவிடுகின்றனர் என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில்தான் மருத்துவ மனைகளில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இடப்பற்றக்குறை, பெருகிவரும் இறப்பு எண்ணிக்கை, மக்களிடையே விழிப்புணர்வு குறைவு, என்ற செய்திகளுடன், செப்டம்பர் வாக்கில் இறப்பு எண்ணிக்கை 26,000 ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அறிவியல் குழு உறுப்பினர் டாக்டர் அடிபா கமருல் சாமான் அவர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருப்பதின் நம்பகத்தன்மை அரசாங்கம் ஆய்வு செய்யவேண்டும்” என்றும் குமரன் கேட்டுக்கொண்டார்.

“அரசாங்கம் மேற்கொண்டுவரும் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளவேண்டும்” என்று கேட்டுகொண்ட குமரன், “நாடாளுமன்றம்-சட்ட மன்றங்கள் இடை நீக்கத்தால் – முடக்கத்தால் செயற்படமுடியாமல் இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த உறுப்பினர்கள், வாக்காளர்களுடன் தங்களுக்குள்ள தொடர்பு மூலமாக அரசாங்கத்திற்கு நிறைய உதவமுடியும்” என்று குறிப்பிட்டார்.

“ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் அந்தந்த உறுப்பினர் தலைமையில், சட்டமன்ற, நகராண்மைக்கழக, மாவட்டமன்ற உறுப்பினர்களைக்கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைத்து, அரசாங்க நடவடிக்கைகளுக்கு மக்களின் ஆதரவை திரட்ட முயற்சிசெய்ய வேண்டும். கட்சி வேறுபாட்டைப் பார்க்காதீர்கள். அடுத்த தேர்தலை மட்டும் சிந்திக்காதீர்கள். நாட்டு மக்களின் நலனை மனத்தில் கொள்ளுங்கள். மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்த்து நோய் தொற்றை ஒழித்திட நாடாளுமன்றத்தில் உறுப்பியம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளையும் கொண்ட ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை, ஒருமைப்பாட்டு அமைச்சரவையை அமைத்து நாட்டை கோவிட் எதிரியிடமிருந்து மீட்க பிரதமரும் அரசாங்கமும் சிந்திக்க வேண்டும்” என்றும் குமரன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.