Home நாடு செல்லியல் பார்வை : அவசரகால சட்டமும் – சரவாக் சட்டமன்றத் தேர்தல் சிக்கலும்!

செல்லியல் பார்வை : அவசரகால சட்டமும் – சரவாக் சட்டமன்றத் தேர்தல் சிக்கலும்!

535
0
SHARE
Ad

(ஜூன் 6-ஆம் தேதியோடு சரவாக் சட்டமன்றத்தின் தவணைக் காலம்  முடிவடைந்தாலும் சரவாக் மாநில அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கலாம் என்ற ஒப்புதலை மாமன்னர் வழங்கியிருக்கிறார். அவசர கால சட்டம் முடிவடையும் நேரம் நெருங்க நெருங்க, சரவாக் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுமா, ஒத்தி வைக்கப்பட முடியுமா என்ற சட்டரீதியான கேள்விகள் எழுகின்றன. அதுகுறித்து தனது செல்லியல் பார்வையில் விவாதிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

1 ஆகஸ்ட் 2021!

இந்த தேதி மலேசிய வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துவிட்டது. இந்தத் தேதி நெருங்க நெருங்க மலேசியர்களிடத்திலும், அரசியல்வாதிகளிடத்திலும் பரபரப்பும், நெஞ்சில் படபடப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

காரணம், அன்றுடன்தான் நடப்பிலிருக்கும் அவசரகாலச் சட்டம் ஒரு முடிவுக்கு வருகிறது.

#TamilSchoolmychoice

இப்போது எங்கும் எழுந்துள்ள கேள்வி, அவசர காலச் சட்டம் நீட்டிக்கப்படுமா என்பதுதான்!

இந்தக் கேள்வியோடு சரவாக் மாநிலத்திற்கு இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் விவகாரமும் சேர்ந்து சரவாக் அரசியலை சிக்கலாக்கியுள்ளது.

முதலில் சரவாக் சட்டமன்றத் தேர்தலால் எழுந்துள்ள சிக்கல் என்னவென்று பார்ப்போம்!

ஜூன் 6-ஆம் தேதியோடு முடிவடையும் சரவாக் சட்டமன்றத்தின் தவணை

சரவாக் மாநிலத்துக்கான சட்டமன்றத்துக்கான தவணை இந்த ஆண்டு ஜூன் 6-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, முதல் சட்டமன்றக் கூட்டம் நடத்தப்படும் தேதியிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த சட்டமன்றத்திற்கான தவணை நீடிக்கும் என்கிறது மலேசிய அரசியல் அமைப்புச் சட்டம்.

2016-ஆம் ஆண்டு சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முதல் சட்டமன்றக் கூட்டம் ஜூன் 6, 2016-இல் நடைபெற்றது.

அந்த நாளிலிருந்து 5 ஆண்டுகள் கணக்கிட்டால் இந்த ஆண்டு ஜூன் 6-ஆம் தேதியோடு சரவாக் சட்டமன்றத்திற்கான தவணை முடிவடைகிறது. அந்த தேதியிலிருந்து அடுத்த 60 நாட்களுக்குள் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

எனினும் தற்போது ஆகஸ்ட் 1 வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கிறது.

சிக்கலுக்கு தற்காலிகத் தீர்வை வழங்கிய மாமன்னர்

கடந்த செவ்வாய்க்கிழமை (மே 25) சரவாக் முதலமைச்சர் அபாங் ஜோஹாரியை இயங்கலை மூலம் சந்தித்திருக்கிறார் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்.

அந்தச் சந்திப்பின்போது ஜூன் 6-ஆம் தேதியோடு சரவாக் சட்டமன்றத்தின் தவணைக் காலம்  முடிவடைந்தாலும் சரவாக் மாநில அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கலாம் என்ற ஒப்புதலை மாமன்னர் வழங்கியிருக்கிறார்.

மாமன்னரின் ஒப்புதலைத் தொடர்ந்து சரவாக் சட்டமன்றத்தின் தவணக் காலம் அவசர கால சட்டம் அமுலில் இருக்கும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீடிக்கும். சரவாக் அரசாங்கமும் ஆட்சியில் இருக்கும்.

அதன் பிறகு?

சரவாக் சட்டமன்றத் தேர்தலால் அவசர காலச் நீட்டிக்கப்படுமா?

சரவாக் சட்டமன்றத் தேர்தலை ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஒத்தி வைப்பதற்கான சட்ட சலுகைகள் எதுவும் மலேசிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை. எனவே, சட்டமன்றத் தேர்தலைக் கண்டிப்பாக நடத்தியாக வேண்டும்.

கொவிட்-19 தொற்று பரவலால் சரவாக் தேர்தலை ஒத்தி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தால், அதற்கேற்ப மத்திய அரசாங்கம் சரவாக் மாநிலத்தில் மட்டும் அவசர கால சட்டத்தை, மாமன்னரின் ஒப்புதலுடன் அமுலாக்க வேண்டும்.

இதற்கான நடைமுறைகள் ஏற்கனவே மற்ற நாடாளுமன்ற தொகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தத் தொகுதிகளில் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டு இடைத் தேர்தல்களும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, சரவாக் சட்டமன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டும் என்றால், ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு அவசரகாலச் சட்டத்தை பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து நாடு முழுமையிலும் நீட்டிக்க வேண்டும்.

அல்லது சரவாக் மாநிலத்துக்கு மட்டும் அவசர கால சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.

இந்த இரண்டு முடிவுகளில் ஏதாவது ஒன்றைச் செய்தால் மட்டுமே சரவாக் சட்டமன்றத் தேர்தலை ஒத்தி வைக்க முடியும் என சட்ட வல்லுநர்கள் மத்தியில்  கருதப்படுகிறது.

பிரதமர் மொகிதின் யாசின் எதிர்நோக்கும் சிக்கல்

ஆளும் தேசியக் கூட்டணி மீதான எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.

அவசர கால சட்ட அமுலாக்கம், நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் தவிர்ப்பது, கொவிட்-19 பாதிப்புகளைக் கையாளும் முறை, ஒதுக்கப்பட்ட நிதிகள் என்னவானது என்ற கேள்விகளுக்கு விடை தராமல் இருப்பது, ஆகக் கடைசியாக தடுப்பூசி போடுவதில் குழப்படிகள் என பல அம்சங்களில் பிரதமர் மொகிதின் யாசின் மீதும் அவரின் அமைச்சரவை மீதும் கடுமையானக் கண்டனக் கணைகள் பாய்ந்து வருகின்றன.

இதனால், மொகிதின் யாசின் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்.

அவசர கால சட்டத்தை ஆகஸ்ட் 1-ஆம் தேதியோடு முடிவுக்குக் கொண்டு வருவதா அல்லது நீட்டிப்பதா?

அவசர கால சட்டத்தை மேலும் நீட்டித்தால் நாட்டில் மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்படும். அதை எப்படி சமாளிப்பது?

அல்லது சரவாக் மாநிலத்திற்கு மட்டும் அவசர கால சட்டம் கொண்டுவரப்பட்டு, அதன் வழி சரவாக் தேர்தல்களை ஒத்தி வைக்கலாமா?

அவசர கால சட்டத்தை நீட்டிக்க மாமன்னர் ஒப்புதல் தராவிட்டால், நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் தனது தேசியக் கூட்டணிக்கான பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி?

அவ்வாறு நிரூபிக்க இயலாவிட்டால் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு 15-வது பொதுத் தேர்தலுக்கு வழிவிடுவதா?

சரவாக் சட்டமன்றத் தேர்தலை 15-வது பொதுத் தேர்தலோடு சேர்ந்து நடத்துவதா?

அப்படி நடத்துவது கொவிட்-19 நச்சுயிரி கோரத்தாண்டவம் ஆடும் இந்த காலகட்டத்தில் சாத்தியமா?

ஆகஸ்ட் 1-ஆம் தேதியோடு மொகிதினின் தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை மீட்டுக் கொள்வோம் என அறிவித்திருக்கும் அம்னோவுடன் உறவை முறித்துக் கொள்வதா? அல்லது சமாதானமாகித் தொடர்வதா?

இதுபோன்ற கேள்விகளுக்கு மொகிதின் யாசின் அரசாங்கம் அடுத்து வரும் இரண்டு மாதங்களில் விடைகாண வேண்டும்.

இப்படியாக அவசர காலம் தொடர்பான பல்வேறு கேள்விகளுடன் – சிக்கலாகப் பின்னிப் பிணைந்திருக்கிறது நடைபெறவேண்டிய சரவாக் சட்டமன்றத் தேர்தல்!

-இரா.முத்தரசன்