Home நாடு எஸ்பிஎம் 2021 தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பு

எஸ்பிஎம் 2021 தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பு

595
0
SHARE
Ad

கோலாலம்பூர் : வழக்கமாக ஆண்டின் இறுதியில் நவம்பர் மாத வாக்கில் நடைபெறும் 2021 எஸ்பிஎம் ஐந்தாம் படிவத் தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக கல்வி அமைச்சர் ராட்சி ஜிடின் அறிவித்தார்.

கடந்தாண்டு நடைபெற வேண்டிய 2020 ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வுகள் கொவிட்-19 பாதிப்புகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றன.

அந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள் எதிர்வரும் ஜூன் 10-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் இயங்கலை வழியான வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

பள்ளிகளுக்கான விடுமுறை எதிர்வரும் ஜூன் 13-ஆம் தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் அடுத்த 25 நாட்களுக்கு இயங்கலை வழியான வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் ராட்சி ஜிடின் தெரிவித்தார்.

இந்த முடிவு தனியார், அனைத்துலக மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான பள்ளிகள் என அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும்.

அடுத்த கட்டமாக பள்ளிகளுக்கான மத்திய ஆண்டு விடுமுறை ஜூலை 16 அல்லது 17-ஆம் தேதி தொடங்கும் என்றும் பள்ளிகள் மீண்டும் ஜூலை 25 அல்லது 26-ஆம் தேதி திறக்கப்படலாம் என்றும் ராட்சி ஜிடின் கூறினார்.

இன்று இயங்கலை வழி நடத்தப்பட்ட தருத்தரங்கு ஒன்றில் அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.

அடுத்து என்ன நடக்கும் என்பதை இப்போதைக்குக் கூற முடியாது என்றும் கூறிய ராட்சி ஜிடின், பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் ஜூலை 25 அல்லது 26-ஆம் தேதிக்கு ஒருவாரம் முன்பாக கல்வி அமைச்சு அடுத்த கட்ட அறிவிப்பை வழங்கும் என்றும் மேலும் கெரிவித்தார்.