தேர்தல் ஆணையத்தின் செயலாளர் இக்மால்ருடின் இஷாக் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஜூன் 6-ஆம் தேதியோடு சரவாக் சட்டமன்றத்தின் தவணைக் காலம் முடிவடைந்திருக்கிறது. இருப்பினும் சரவாக் மாநில அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கலாம் என்ற ஒப்புதலை மாமன்னர் வழங்கியிருக்கிறார்.
சரவாக் சட்டமன்றத் தேர்தலை எப்போது நடத்துவது என்பதை மாமன்னர் சரவாக் மாநில ஆளுநருடன் கலந்தாலோசித்து பின்னர் அறிவிப்பார் என்றும் இக்மால்ருடின் தெரிவித்தார்.
நடப்பிலிருக்கும் சரவாக் சட்டமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிவரை அதாவது அவசரகாலம் அமுலில் இருக்கும் வரை செயல்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையில் சரவாக் மாநில சட்டமன்றத்தின் அவைத் தலைவர் முகமட் அஸ்பியாவும் தனியாக விடுத்த அறிக்கை ஒன்றில் சட்டமன்றத்தின் தவணைக் காலம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
ஜூன் 6-ஆம் தேதியோடு முடிவடையும் சரவாக் சட்டமன்றத்தின் தவணை
2016-ஆம் ஆண்டு சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முதல் சட்டமன்றக் கூட்டம் ஜூன் 6, 2016-இல் நடைபெற்றது.
அந்த நாளிலிருந்து 5 ஆண்டுகள் கணக்கிட்டால் இந்த ஆண்டு ஜூன் 6-ஆம் தேதியோடு சரவாக் சட்டமன்றத்திற்கான தவணை முடிவடைகிறது. அந்த தேதியிலிருந்து அடுத்த 60 நாட்களுக்குள் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
எனினும் தற்போது ஆகஸ்ட் 1 வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கிறது.
சிக்கலுக்கு தற்காலிகத் தீர்வை வழங்கிய மாமன்னர்
அந்தச் சந்திப்பின்போது ஜூன் 6-ஆம் தேதியோடு சரவாக் சட்டமன்றத்தின் தவணைக் காலம் முடிவடைந்தாலும் சரவாக் மாநில அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கலாம் என்ற ஒப்புதலை மாமன்னர் வழங்கியிருக்கிறார்.
மாமன்னரின் ஒப்புதலைத் தொடர்ந்து சரவாக் சட்டமன்றத்தின் தவணக் காலம் அவசர கால சட்டம் அமுலில் இருக்கும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீடிக்கும். சரவாக் அரசாங்கமும் ஆட்சியில் இருக்கும்.
மாமன்னரின் இந்த முடிவின் அடிப்படையில் சரவாக் சட்டமன்றத் தேர்தல்களை தேர்தல் ஆணையமும் ஒத்திவைத்திருக்கிறது.