Home நாடு ஹிஷாமுடின் ஹூசேன் கொவிட்-19 அபாயத்தால் தனிமைப்படுத்தப்பட்டார்

ஹிஷாமுடின் ஹூசேன் கொவிட்-19 அபாயத்தால் தனிமைப்படுத்தப்பட்டார்

717
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சீனாவின் போர்விமானங்கள் மலேசிய வான்வெளியின் அத்து மீறிப் பறந்ததை முன்னிட்டு எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் நாளை திங்கட்கிழமை நடைபெறும் ஆசியான் – சீனா இடையிலான வெளியுறவு அமைச்சர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கொவிட்-19 பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருக்கமாகப் பழகிய காரணத்தால் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் தன்னைத் தானே தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக, நாளை திங்கட்கிழமை சீனாவின் சோங்கிங் நகரில் நடைபெறவிருக்கும் சீனாவுக்கும் ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையிலான சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் மலேசியாவின் சார்பாக வெளியுறவுத் துணையமைச்சர் கமாருடின் ஜபார் கலந்து கொள்கிறார்.

#TamilSchoolmychoice

ஆனால், ஹிஷாமுடினுக்குப் பதிலாக கமாருடின் ஜபாரே சீன வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து சீன போர் விமானங்கள் அத்துமீறிப் பறந்த விவகாரம் குறித்து விவாதிப்பாரா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த முறை வாங் யீயை ஹிஷாமுடின் சந்தித்தபோது அவரை “பிக் பிரதர்” (பெரிய அண்ணன்) என்று குறிப்பிட்டுப் பேசியது மலேசியர்களிடையே சர்ச்சைகளையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியது.