கோலாலம்பூர்: முடியாட்சிக்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்பதற்காக பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசானை பதவியில் இருந்து நீக்குமாறு ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார்.
மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா மக்களவை திறக்கப்பட வேண்டிய சரியான தேதியை நிர்ணயிக்காமல் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு உத்தரவிட்டார் என்று தக்கியுடின் கூறியதைத் தொடர்ந்து குவான் எங் இவ்வாறு கூறினார்.
“சட்டத்தை மதிக்காததற்காகவும், மாமன்னருக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் எதிராக வெளிப்படையாகக் கலகம் செய்ததற்காகவும் தக்கியுடின் நீக்கப்பட வேண்டும்.
“நாடாளுமன்றம் அமர வேண்டிய சரியான தேதி அல்லது மாதத்தை மாமன்னர் குறிப்பிடவில்லை என்று கூறி, உத்தரவை சிதைக்கும் தக்கியுடினின் நடவடிக்கை பொறுப்பற்றது மற்றும் நேர்மையற்றது,” என்று லிம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேற்று, மாமன்னர் விரைவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.