கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் உடனடியாக நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட மறுத்ததை அடுத்து, அதற்கு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தார்களா என்பதை உறுதிப்படுத்துமாறு நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்றக் குழு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவிடம் முறையிட்டுள்ளது.
“பிரதமரின் இந்த முடிவு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆதரிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த மத்திய அரசியலமைப்பின் 43- வது பிரிவின் கீழ் தனது விருப்பப்படி செயல்படுவதில் மாமன்னருக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
“பெரும்பான்மையான மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு பிரதமருக்கு இல்லையென்றால், மத்திய அரசியலமைப்பின் 43- வது பிரிவின் கீழ் அவர்செயல்படுவதை நியாயப்படுத்தும் பெரும்பான்மை நம்பிக்கை பிரதமருக்கு இல்லை என்பது தெளிவாகும். மொகிதின் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும், “என்று அக்குழு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டுவர மறுத்ததோடு, பிரதமரும் அவரது அமைச்சரவையும் உடனடியாக நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்காதது, மாமன்னரின் ஆணைக்கு துரோகம் செய்யத் தூண்டுவது போல எனவும், மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.