Home நாடு தமிழ்ப் பள்ளிக்கு சுவாமி இராமதாசர் பெயர் – பாராட்டுகள் குவிகின்றன

தமிழ்ப் பள்ளிக்கு சுவாமி இராமதாசர் பெயர் – பாராட்டுகள் குவிகின்றன

1248
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : நமது நாட்டில் தமிழ்த் தொண்டாற்றியவர்களில் முக்கியமானவர் சுவாமி இராமதாசர். தமிழ் மொழி, ஆன்மீகம், சிலம்பத் தற்காப்புக் கலை என பலவிதமான தமிழ்க் கலைகளை அறிந்தவர். பினாங்கு மாநிலத்தில் நீண்ட காலமாக தங்கியிருந்து தானறிந்த கலைகளை பொதுமக்களுக்குக் கற்றுத் தந்தவர்.

நாடுமுழுக்க பல ஊர்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே தமிழ் உணர்வும், ஆர்வமும் பெருகப் பாடுபட்டவர் சுவாமி இராமதாசர்.

அவரைப் போன்ற தமிழ்ப் பெரியவர் ஒருவரின் பெயரை தமிழ்ப் பள்ளி ஒன்றுக்கு சூட்டியிருப்பது குறித்து பல முனைகளிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

#TamilSchoolmychoice

பினாங்கில் அமைந்திருக்கும் ஜாலான் சுங்கை தமிழ்ப் பள்ளிக்கு சுவாமி இராமதாசர் பெயர்  சூட்டப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி தெரிவித்திருக்கிறார்.

பினாங்கு மாநிலத்தில், தமிழ்க் கல்வி கற்பித்ததோடு தமிழ் இலக்கியம், கவிதை மற்றும் கலைகள் பலவற்றையும் கற்பித்தவர் சுவாமி இராமதாசர் என இராமசாமி மேலும் தெரிவித்தார்.

சுவாமி இராமதாசரின் பரிந்துரை தனது பார்வைக்கு வந்தபோது, அதைச் செயல்படுத்தத் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும், ஆதரவு வழங்கியதாகவும் இராமசாமி கூறினார்.

பினாங்கில் செந்தமிழ்க் கலாநிலையம் என்ற அமைப்பொன்றை நிறுவியவர் சுவாமி இராமதாசர். ஆய கலைகள் 64 என தமிழில் சிறப்பித்துக் கூறுவார்கள். அவற்றில் 57 கலைகளை சுவாமி இராமதாசர் கற்றுத் தேர்ந்திருந்தார் எனக் கூறுவார்கள்.

அந்தக் கலைகளை கற்பிக்கவும் நாடு முழுக்கப் பரப்பவும் சுவாமி இராமதாசர் தன் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டார். குடும்பத்தினர் என யாருமில்லாத நிலையில் தன்னலமற்ற முறையில் அவர் சமூகப் பணியாற்றினார்.

அன்னாரின் பெயரைச் சூட்ட கல்வி அமைச்சும் ஒப்புதல் அளித்திருப்பது குறித்தும் தமிழ் ஆர்வலர்கள் கல்வி அமைச்சைப் பாராட்டியிருக்கின்றனர்.

டான்ஸ்ரீ குமரனின் பாராட்டு

பினாங்கு ஜாலான் சுங்கை தமிழ்ப் பள்ளிக்கு சுவாமி இராமதாசர் பெயர் சூட்டப்பட்டிருக்கும் செய்தி இன்பத் தேனாகக் காதில் பாய்கிறது என டான்ஸ்ரீ க.குமரன் வர்ணித்திருக்கிறார்.

முன்னாள் தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியரான க.குமரன் முன்னாள் துணையமைச்சருமாவார்.

“பள்ளி நாட்களில் இருந்து சுவாமி இராமதாசரை நான் அறிவேன். தமிழர்கள் தங்களின் அடையாளத்தை இழக்காமல் இருப்பதற்கு நாளும் உழைத்தவர். தமிழகம் திரும்புவதற்கு முன் நீண்டநாள் தைப்பிங்கிலும், பத்து காஜாவிலும் வாழ்ந்து சித்த மருத்துவத் துறையில் ஈடுபட்டார். பட்டாணி ரோடு தொழிலாளர் குடியிருப்பில் சுவாமி இராமதாசர் தோற்றுவித்த தமிழ்ப் பள்ளிக்கூடமே பின்னர் அரசினர் தமிழ்ப் பள்ளியாக ஜாலான் சுங்கை தமிழ்ப் பள்ளியாக மாறியது. இன்று அவரின் பெயரிலேயே பெயர் மாற்றம் கண்டுள்ளது” என குமரன் விவரித்தார்.

இந்தப் பெயர் மாற்றத்திற்கு முயற்சி எடுத்த கவிஞர் பெ.க.நாராயணன் குழுவினருக்கும், ஒத்துழைப்பு வழங்கிய துணை முதல்வர் இராமசாமிக்கும், ஒப்புதல் அளித்த கல்வி அமைச்சுக்கும் குமரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

2017-ஆம்ஆண்டில் சுவாமி இராமதாசரின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. அப்போது தமிழகத்தில் அந்த விழா நடைபெற்ற போது சுவாமி இராமதாசர் உருவச் சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பையும் தான் பெற்றதாக குமரன் நினைவு கூர்ந்தார்.

ஏற்கனவே கெடாவில் ஒரு தமிழ்ப் பள்ளிக்கு அமரர் கோ.சாரங்கபாணியின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மேலும் சில தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்திய சமூகத்தின் முக்கியத் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.