கோலாலம்பூர் : பேராக் இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அம்மாநில அரசு வழங்கிய 2,000 ஏக்கர் நிலத்தில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 18 மில்லியன் ரிங்கிட் வரை முதலீடு செய்து கடந்த ஐந்து ஆண்டுகளாக செம்பனைப் பயிர் மூலம் மேற்கொண்ட தோட்ட மேம்பாட்டிற்கு தற்போது பலன் விளையத் தொடங்கி யுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை பேராக் மாநில கல்வி மேம்பாட்டு வாரியத்திற்கு 69 ஆயிரம் ரிங்கிட் வருமானம் கிடைத்துள்ளது. இது, ஒரு வரலாற்றுப் பதிவாகும்.


கருங்கல் மலையும் மடுவும் நிறைந்த காட்டுப்பகுதியான இந்த 2000 ஏக்கர் நிலத்தில் ஏறக்குறைய 1,500 ஏக்கர் நிலம்தான் செம்பனைப் பயிர் நடுவதற்கு ஏற்புடையாக இருக்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டில் செம்பனை பயிர் நட்டு, “கல்வித் தோட்டம்” என்று பெயரிட்டு அதைப் பராமரித்து வருவதுடன் அந்த நிலத்தை இந்திய சமுதாய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பலன் தரும் பூமியாக மாற்றும் அரும்பணியை கூட்டுறவு சங்கம் அயராமல் மேற்கொண்டு வருகிறது.
பேராக் இந்திய சமூகத்திற்கு ஏறக்குறைய நாற்பது மில்லியன் பெறுமானமுடைய ஒரு நிலவுடைமைச் சொத்தாக இந்தத் தோட்டம் உருவாகி இருக்கிறது என்றால் அதற்கு கூட்டுறவு சங்கத் தலைவர் ‘சமூகக் காவலர்’ டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களின் முன்னெடுப்பும் சமுதாய உணர்வும்தான் காரணம்.
தோட்ட மேம்பாட்டுத் துறையில் கூட்டுறவு சங்கத்திற்கு உள்ள பரந்த அனுபவத்தின் அடிப்படையிலும் அப்போதைய தேசிய முன்னணி பிரதமர் நஜிப் துன் ரசாக் பரிந்துரையினாலும் அப்போதைய பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாம்ரி, கூட்டுறவு சங்கத் தலைமைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், சம்பந்தப்பட்ட நிலத்தை அடைமானம் வைத்து பொருளக நிதியுதவி பெற முடியாதென்று அப்போதைய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ரி அப்துல் காதர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது; இருந்தபோதும் எடுத்த முயற்சியில் இருந்து பின்வாங்கக் கூடாதென்ற எண்ணத்தையும் அந்த நிலத்தை இந்திய சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் மாற்ற வேண்டும் என்ற சிந்தனையையும் கொண்ட கூட்டுறவு சங்கம், தன் சொந்த முயற்சியில் நிதி ஆதாரத்தைப் பெற்று இந்தக் கல்வித் தோட்டத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதென அதன் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் முடிவெடுத்தார்.
மூன்றாவது தரமாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த நிலம், தரை மட்டத்தில் இருந்து சுமார் 600 அடி உயரத்தில் ஒரு நீளமான மலைத் தொடரைப் போன்று அமைந்துள்ளதால், ஈரப்பதம் குறைவாகக் கொண்டிருந்தது.
இவற்றையெல்லாம் சமாளிக்க நீர் மேலாண்மை முறையை நுணுக்கமாக கையாள வேண்டியிருக்கிறது. தவிர, மலைப்பகுதியில் வசிக்கும் காட்டுப் பன்றிகள் செம்பனைக் கன்றுகளின் குருத்தைத் தின்று வருவதால் செம்பனைப் பயிரைப் பாதுகாப்பது இன்னொரு சவாலாக இருந்தது. தற்பொழுது, செம்பனை மரங்கள் வளர்ந்து குலைவிட ஆரம்பித்துள்ளதால் அவற்றையும் காட்டுப்பன்றிகள் தின்று அழிக்க முற்படுகின்றன.
பொட்டல் வெளியாகவும் கருங்கல் பாறைகள் நிறைந்த மலைப்பகுதியாகவும் இருந்த இந்நிலத்தை பயிர் விளையும் தோட்டமாக கூட்டுறவு சங்கம் மாற்றியதன் விளைவாக, இந்த நிலப்பகுதியின் மதிப்பு இன்று கோடிக்கணக்கில் உயர்ந்துள்ளது. இது, மலேசிய இந்திய சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளது என்று டத்தோ பா. சகாதேவன் குறிப்பிட்டார்.
பேராக் இந்திய கல்வி மேம்பாட்டு அறவாரியத்திற்கான இந்த நிலத்தில் கூட்டுறவு சங்கம் முதலீடு செய்துள்ள இந்தப் பெருந்தொகைக்கு வட்டித் தொகையாக மட்டும் கூட்டுறவு சங்கத்திற்கு ஆண்டுக்கு எட்டு இலட்சம் வெள்ளிவரை பேராக் கல்வி அறவாரியம் செலுத்த நேரிடும்.


இதனால் கல்வி அறவாரியம் திட்டமிட்டுள்ள கல்விச் சேவையில் பின்னடைவு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, கூட்டுறவு சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் மற்றும் நிருவாக வாரிய உறுப்பினர்களின் ஒப்புதலுடன் வட்டியில்லாமல் இந்தத் தொகையை கட்டம் கட்டமாக திரும்பப்பெறுவது என கடந்த 2020-ஆம் ஆண்டில் முடிவெடுக்கப்பட்டது என்று டத்தோ சகாதேவன் அவர்கள் மேலும் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையில், பேராக் இந்திய கல்வி மேம்பாட்டு வாரியத்தில் தமிழ்ப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஒருவரை பொறுப்பில் அமர்த்தி, சொந்த செலவில் ஓர் அலுவலகத்தையும் வாரிய அறங்காவலர்கள் நிருவகித்து வருகின்றனர். ஊழியருக்கான சன்மானம், அலுவலக வாடகை, தண்ணீர் மற்றும் மின் கட்டணம் போன்ற அடிப்படை செலவினத்திற்காக இதுவரை ஒரு இலட்சம் ரிங்கிட்டுக்கு மேல் செலவு செய்துள்ளதாக கல்வி அறவாரியத்தின் அறங்காவலர்களில் ஒருவரான டான்ஸ்ரீ வீரசிங்கம் குறிப்பிட்டார்.
இடைப்பட்ட காலத்தில் கல்வி அறவாரியம் தன்னுடைய நிருவாக நடைமுறை சிக்கல்களை சீர்செய்துக் கொள்வதுடன், தன்னை வலுப்படுத்திக் கொள்ளவும் வேண்டி இருப்பதால், அடுத்த (2022) ஆண்டு தொடக்கத்தில் இருந்து மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் மற்றும் இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று டான்ஸ்ரீ வீரசிங்கம் குறிப்பிட்டார்.
இன்றைய சூழலில், இந்தக் கல்வித் தோட்டம் ஒரு நல்ல சொத்தாக மாறிவிட்ட போதிலும் கூட்டுறவு சங்கம் செலவு செய்திருக்கும் தொகை வசூல் செய்யப்பட்ட பிறகுதான் இத்தோட்டத்தின் முழு பலனையும் பேராக் இந்திய கல்வி மேம்பாட்டு அறவாரியம் அனுபவிக்க முடியும்.
இந்த வேளையில், கல்வித் தோட்டத்தின் மேலாளர் இரா.அன்பானந்தனின் பங்களிப்பையும் ஈடுப்பாட்டையும் பற்றி குறிப்பிட வேண்டும். கல்வித் தோட்ட நில அமைப்பிற்கும் தன்மைக்கும் ஏற்ப தோட்டத்தை சீரமைத்து, தோட்டம் முழுவதும் நீர்நிலைகளை உருவாக்கி, அதன் மூலம் மழை நீரை சேமித்து நீர் மேலாண்மையை தோட்ட நிருவாகம் சிறப்பாக கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.