Home நாடு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு தொடங்கியது – தடுப்பூசி செலுத்த 3 பேர் காரில் செல்லலாம்

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு தொடங்கியது – தடுப்பூசி செலுத்த 3 பேர் காரில் செல்லலாம்

1085
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை ஜூலை 3-ஆம் தேதி முதற்கொண்டு ஜூலை 16-ஆம் தேதி வரையில் கிள்ளான் பள்ளத்தாக்கின் பெரும்பான்மையான பகுதிகள் “கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின்” கீழ் செயல்படத் தொடங்கின.

காவல் துறை – இராணுவம் இணைந்த  சோதனைச் சாவடிகள் எல்லா இடங்களிலும் அமைக்கப்பட்டு, கடுமையான சோதனைகள் பின்பற்றப்படும் என காவல் துறை தலைவர் அக்ரில் சானி தெரிவித்தார்.

எனினும் காவல் துறையினர் மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்வர் என்றும் அக்ரில் சானி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

உதாரணமாக, கொவிட் தடுப்பூசிகள் செலுத்த செல்பவர்கள் காரில் 3 பேர் வீதம் பயணம் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைத் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 2) முதல் காலையிலேயே பேரங்காடிகளிலும், கடைகளிலும் மக்கள் குவிந்து, பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஒரு தடவைக்கு ஒரு நபர் மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் இருந்து வெளியேறவும், பொருட்கள் வாங்கவும் முடியும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் அத்தியாவசியமான முக்கியத் தொழிற்சாலைகள் மட்டுமே இந்த காலகட்டத்தில் இயங்க முடியும்.

அரிசி, ரொட்டி, சீனி, சமையல் எண்ணெய், கோதுமை, பால், குழந்தைகளுக்கான உணவு, மருந்துகள், முகக் கவரிகள் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டுமே இந்தக் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலகட்டத்தில் இயங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்படும் இந்த வட்டாரங்களில் ஒவ்வொரு 100,000 எண்ணிக்கை கொண்ட மக்கள் தொகைக்கும் 12.1 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

அதன் காரணமாகவே, இந்த வட்டாரங்கள் கடுமையாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாது. அப்படியே வெளியேறினாலும் ஒரு தடவைக்கு ஒரே ஒரு நபர் மட்டுமே வெளியேற முடியும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், சுகாதாரக் காரணங்களுக்காகவும் மட்டுமே அந்த ஒரு நபரும் வெளியேற முடியும். 10 கிலோமீட்டர் தூரத்திற்குள்தான் அவர்கள் பயணம் செய்ய முடியும்.

இரவு 8.00 மணிக்குப் பின்னர் யாரும் இல்லங்களில் இருந்து வெளியேற முடியாது.

எனவே, கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகள் இந்தக் கடுமையாக்கப்பட்ட வட்டாரங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனவா என்பது குறித்து பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.