மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய பத்திரிகை அறிக்கை
உலக வரலாற்றின் மிக மோசமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக அடிமட்டத்தில் வாழும் மக்கள் அவர்களின் அன்றாட தேவைகளுக்கே சிரமப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனை உணர்ந்த நமது பிரதமர் அவர்கள் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 300,000 ரிங்கிட் மானியம் கொடுத்து, அந்தந்த நாடாளுமன்றத்தைச் சேர்ந்த மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கும்படி பணித்துள்ளார்.
இருந்த போதிலும் இந்த உதவி போதாது என்பதை நாம் அறிவோம். எனவே இயன்றவர்கள் குறிப்பாக ஆலயங்கள் இம்மாதிரியான உதவிகளை வழங்க முன் வரவேண்டும். வசதியும், வாய்ப்பும் நிறைந்த ஆலயங்கள் மக்கள் பசி தீர்க்க ஆவன செய்ய வேண்டும்.
ஆலயங்களில் சிரமப்படும் ஆலயங்களும் உண்டு என்பதை நாம் அறிவோம். பக்தர்களின் நன்கொடை மற்றும் அன்றாட அர்ச்சனைகளை நம்பி செயல்படும் ஆலயங்கள் உள்ளன. ஆனால் வசதிபடைத்த ஆலயங்களும் பல உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆக இது போன்ற ஆலயங்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு உணவுகளையும், அடிப்படை உணவுத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்.
இதுநாள் வரை பொது மக்கள் ஆலயத்திற்கு நன்கொடை, அர்ச்சனை, பூஜைகள், வேண்டுதல் என பல்வேறு வழிகளில் பணத்தை வழங்கி வந்துள்ளனர். பொது மக்கள் கொடுத்ததை அவர்களுக்கே திருப்பித் தரும் காலகட்டம் இது என்பதை ஆலய நிர்வாகம் உணரவேண்டும்.
“மனிதாபிமானத்தோடு உங்கள் ஆலயத்தைச் சுற்றி உள்ள வசதியற்ற மக்களுக்கு நீங்கள் இந்த உதவியைச் செய்ய வேண்டும் எனும் வேண்டுகோளை முன் வைக்கிறேன். இதற்கு முன்பாகவே ஒரு சில ஆலயங்கள் சுற்றுவட்டார மக்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என்பதை அறிவேன். அந்த ஆலயங்களுக்கும், இந்த சேவையை மேற்கொண்ட நல் உள்ளங்களுக்கும் இவ்வேளையில் நன்றி.”
நாளுக்கு நாள் கொரோனா தொற்று பெருகி வருகிறது. அதனால் நடமாட்டக் கட்டுப்பாடு இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கொரோனா எனும் இந்த சர்வதேச பரவலால் உலக மக்களில் இதுவரை கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். இந்த நிலை மாறி நாம் வழக்க நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றால் பொது மக்களின் ஒத்துழைப்பு மிகமிக முக்கியம். நடமாட்டக் கட்டுப்பாட்டை முழுமையாகக் கடைப்பிடித்து அரசாங்கத்தின் முயற்சிகளுக்குக் கை கொடுக்க வேண்டும். நமக்கு வரும்வரை ஆபத்தில்லை என்ற மனப்போக்கை விட்டொழிக்க வேண்டும்.
இயன்றவர்களும், முடிந்தவர்களும் வருமானம் இல்லாதவர்களுக்கும், வருமானத்தை இழந்தவர்களுக்கும் உதவ முன் வரவேண்டும். “தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்” என்றான் பாரதி.
அந்த நிலை எழாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம்.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு