பெட்டாலிங் ஜெயா : கடுமையாக்கப்பட்ட முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருவதற்கு முன்பாக டாப் குளோவ் நிறுவனம் தங்களின் 1,606 ஊழியர்களை, தங்களின் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து அருகில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு மாற்றி அழைத்துச் சென்றது தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளைத் தொடக்கியுள்ளனர்.
டாப் குளோவ் நிறுவனத்தின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர் அர்ஜுனாய்டி முகமட் தெரிவித்தார்.
தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
பண்டார் சன்வே (பெட்டாலிங் ஜெயா) வட்டாரத்தில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்த தொழிலாளர்கள் பின்னர் அங்கிருந்து எட்டு வெவ்வேறு தங்கும் விடுதிகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த தங்கும் விடுதிகளை தொழிலாளர்களைத் தங்க வைப்பதற்கும் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் டாப் குளோவ் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து விசாரணை அறிக்கையை நாங்கள் தொடங்கி உள்ளோம் என்று அர்ஜுனாய்டி முகமட் தெரிவித்தார். குற்றவியல் சட்டம் பிரிவு 270 இன்கீழ் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
உயிருக்கு அபாயம் அபாயம் விளைவிக்கும் நோய்களை பரப்புவது, அது தொடர்பிலான கவனக் குறைவு ஆகியவை குறித்த நடவடிக்கைகளை இந்த சட்டம் குற்றமாக வகைப்படுத்துகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
டாப் குளோவ் நிறுவனம் உலகிலேயே மிக அதிக அளவில் இரப்பர் கையுறைகளைத் தயாரிக்கும் மலேசிய நிறுவனமாகும்.