Home இந்தியா ஒலிம்பிக்ஸ் ஹாக்கி : பெண்கள் அணியின் வெற்றியும் – ஷாருக்கானும்!

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி : பெண்கள் அணியின் வெற்றியும் – ஷாருக்கானும்!

722
0
SHARE
Ad

தோக்கியோ : தோக்கியோ ஒலிம்பிக்சில் இந்தியாவின் பெண்களுக்கான ஹாக்கிக் குழுவும் யாரும் எதிர்பாராத விதமாக அரை இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகி இந்திய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்திய பெண்கள் ஹாக்கிக் குழுவின் பயிற்சியாளரான ஸ்ஜோர்ட் மரிஜ்னே இந்திய சமூக ஊடகங்களால் கொண்டாடப்படுகிறார். முதன் முறையாக இந்தியாவின் பெண்கள் ஹாக்கிக் குழு ஒலிம்பிக்சில் அரை இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியிருக்கிறது என்பதுதான் அவர் கொண்டாடப்படுவதற்கான காரணம்.

தனது குழுவினருடனான புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டு “மன்னிக்கவும்! குடும்பத்தினரே! நாங்கள் வீடு திரும்புவதற்கு இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும்”என அவர் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்ததன் மூலம் இந்தியா அரை இறுதி ஆட்டத்தில் நுழைந்திருக்கிறது.

அடுத்து எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி அரை இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவைச் சந்திக்கிறது இந்தியக் குழு.

இதற்கு முன் 1980-இல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில்தான் இந்திய பெண்கள் ஹாக்கிக் குழு சிறந்த முறையில் விளையாடி முத்திரை பதித்திருந்தது.

அதன் பிறகு சுமார் 40 ஆண்டுகள் கழித்து இந்திய பெண்கள் ஹாக்கிக் குழு சிறப்பான விளையாட்டைப் பதிவு செய்திருக்கிறது.

இதற்கிடையில் இன்றைய பெண்கள் ஹாக்கிக் குழுவின் வெற்றியைத் தொடர்ந்து சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் பிரபல நடிகர் ஷாருக்கான்.

அது சரி! இந்தியப் பெண்கள் ஹாக்கிக் குழுவுக்கும் ஷாருக்கானுக்கும் என்ன சம்பந்தம்?

அதுதான் சுவாரசியம்!

இந்திய பெண்கள் ஹாக்கிக் குழுவின் பயிற்சியாளரான ஸ்ஜோர்ட் மரிஜ்னே பதிவிட்ட தகவலைத் தொடர்ந்து ஷாருக்கான் தனது டுவிட்டரில் “பரவாயில்லை! தாமதமாகவே வாருங்கள்! ஆனால் வரும்போது கொஞ்சம் தங்கம் கொண்டு வாருங்கள்! 1 பில்லியன் குடும்பத்தினர் காத்திருக்கிறோம்” இப்படிக்கு முன்னாள் பயிற்சியாளர் கபீர் கான்!

-என்று பதிவிட்டிருக்கிறார் ஷாருக்கான்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்து வெற்றி பெற்ற இந்திப்படம் “சக்டே இந்தியா”. அதில் தோல்வி முகத்தில் இருக்கும் இந்தியப் பெண்கள் ஹாக்கிக் குழுவுக்கு கபீர் கான் என்ற பெயர் கொண்ட பயிற்சியாளராகப் பொறுப்பேற்று அவர்களை வெற்றி பெற வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷாருக்கான்.

இப்போது ஏறத்தாழ அதே போன்ற காட்சிகள் உண்மையிலேயே தோக்கியோ ஒலிம்பிக்சில் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன.

அதனால்தான் ஷாருக்கானும் இந்தத் தருணத்தில் சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

ஆண்கள் குழுவும் ஹாக்கியில் சாதனை

இந்த முறை பதக்கம் பெறும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் 3-1 கோல் எண்ணிக்கையில் இந்தியா பிரிட்டனைத் தோற்கடித்தது.

இதனைத் தொடர்ந்து அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா நுழைகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக ஒலிம்பிக்சில் முதல் 4 குழுக்களில் ஒன்றாக இந்திய ஹாக்கிக் குழு தேர்வாகியிருக்கிறது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா பெல்ஜியத்தைச் சந்திக்கிறது.