Home நாடு நாடாளுமன்றம் ஆகஸ்ட் 9-க்குள் கூடவேண்டும்! ஒன்றுபடும் எதிர்க்கட்சிகள்!

நாடாளுமன்றம் ஆகஸ்ட் 9-க்குள் கூடவேண்டும்! ஒன்றுபடும் எதிர்க்கட்சிகள்!

425
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தங்களுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் நாடாளுமன்றம் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொகிதின் யாசின் எதிர்வரும் செப்டம்பரில் தன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வேன் என நேற்று தொலைக்காட்சியில் நேரலையாக உரையாற்றும்போது அறிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சிகள் செப்டம்பர் வரை காத்திருக்க முடியாது, ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள்ளாக நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

#TamilSchoolmychoice

பக்காத்தான் ஹாரப்பான் தலைவர்களாக அன்வார் இப்ராகிம், லிம் குவான் எங், முகமட் சாபு ஆகியோருடன் பெஜூவாங் கட்சியின் தலைவர் துன் மகாதீர், வாரிசான் சபா கட்சியின் தலைவர் ஷாபி அப்டால், உப்கோ கட்சித் தலைவர் வில்பிரெட் மாடியஸ் தங்காவ், முக்ரிஸ் மகாதீர், செலாங்காவ் (சரவாக்) நாடாளுமன்ற உறுப்பினர் பாரு பியான் ஆகியோரும் இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயல்படும் மஸ்லீ மாலிக், சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் ஆகியோரும் இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

கடந்த ஒன்றரை வருடங்களாக பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கம் பல்வேறு குளறுபடிகள், எதிர்ப்புகள், போராட்டங்களுக்கு இடையில் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடிந்ததற்கு காரணம் எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடத்தில் காணப்பட்ட ஒற்றுமையின்மையாகும்.

ஆனால், கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற ஒத்திவைப்பால் எழுந்த போராட்டங்கள் எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தியிருக்கின்றன. ஒரே நேர்க்கோட்டில் இணைத்திருக்கின்றன.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் துன் மகாதீர் இணைந்து உரையாற்றிய காட்சியைக் காண முடிந்தது.

அதற்கு அடுத்த கட்டமாக நேற்றைய கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு எதிராகத் திரண்டிருப்பதாலும், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மீட்டுக் கொண்டிருப்பதாலும், மொகிதின் அரசாங்கம் கவிழ்ந்து விட்டது என அன்வார் அறிவித்திருக்கிறார்.