சென்னை, ஏப்ரல் 22- தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது. மேட்டூர் அணையும் வறண்டு விட்டது.
இவற்றைப் பற்றியெல்லாம் அதிமுக அரசு கவலைப்படாமல் 110ஆவது விதியின் கீழ் திட்டங்களை அறிவிக்கிறது. காகித அறிவிப்பு, தமிழ் மக்களின் தண்ணீர் தாகத்தைத் தணித்து விடுமா?
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கின்றன. குளங்களிலும், கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது.
தண்ணீர் தேவை அதிகரிப்பதுடன், மின்வெட்டுப் பிரச்னையும் இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். குடிநீருக்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.
மக்கள் காலிக் குடங்களுடன் இரவுப் பகலாக கண்விழித்து திரியும் நிலை காணப்படுகிறது.
தண்ணீருக்காக கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களைத் தமிழகம் எதிர்பார்த்திருக்கும் நிலையில், அந்த மாநிலங்களோடு சுமுக உறவு கொள்ளாமல் பகை நோக்குடன் தமிழக அரசு நடந்துகொண்டதுதான் தற்போதுள்ள நிலைக்குக் காரணம்.
காவிரி, வைகை, தாமிரவருணி போன்ற நதிகள் எல்லாம் மணல் திட்டுகளாகிவிட்டன.
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் செங்குன்றம், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி நீர்த் தேக்கங்களின் கொள்ளளவு 11.057 டி.எம்.சி. ஆகும்.
ஆனால் இந்த நீர்த் தேக்கங்களில் சுமார் 10 அடி வரை சேறும் வண்டல் மண்ணும் நிற்கிறது. இதனால் ஏரியின் முழு கொள்ளளவுக்குத் தண்ணீரைத் தேக்க இயலவில்லை.
தமிழகத்தில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து, வருமுன் காத்திட வேண்டிய அதிமுக அரசு அதைச் செய்யவில்லை.
தண்ணீர் பஞ்சம் தற்போது ஏற்பட்ட பின்னரும் அதிலிருந்து மக்களைக் காத்திட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்.