Home நாடு 31 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு ஆதரவு

31 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு ஆதரவு

649
0
SHARE
Ad

கோலாலம்பூர் : துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி இன்று வெள்ளிக்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மொகிதினை ஆதரிக்கின்றனர் என அறிவித்தார்.

எதிர்வரும் செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மொகிதின் யாசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரையில் தாங்கள் தொடர்ந்து அவரை ஆதரித்துவரப் போவதாகவும் இஸ்மாயில் சாப்ரி தெரிவித்தார்.

அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் மஇகா தேசியத் துணைத் தலைவரும் மனிதவள அமைச்சருமான எம்.சரவணன், மசீச தலைவரும் போக்குவரத்து அமைச்சருமான வீ கா சியோங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

அம்னோ உச்சமன்றம் பிரதமருக்கு ஆதரவு தருவதில்லை என முடிவெடுத்திருக்கும் நிலையில் அந்த முடிவுக்கு நீங்கள் கட்டுப்பட்டு கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா இல்லையா என்ற முடிவைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளும் கடிதங்கள், அனைத்து அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) அனுப்பப்பட்டுள்ளன.

தங்களின் முடிவை நாளை சனிக்கிழமை, ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அம்னோ காலக் கெடு நிர்ணயித்துள்ளது.

மொகிதினுக்கு ஆதரவு தெரிவிக்க இஸ்மாயில் சாப்ரியுடன் இணைந்தவர்களின் பட்டியலில் தாஜூடின் அப்துல் ரஹ்மான் (பாசிர் சாலாக்), நஸ்ரி அசிஸ் (பாடாங் ரெங்காஸ்), ஷாஹிடான் காசிம் (ஆராவ்), ஹாலிமா சாதிக் (கோத்தா திங்கி) ஆகிய அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.