Home நாடு கோபால் ஸ்ரீராம் : “நாடாளுமன்ற விவகாரங்களில் மாமன்னருக்கு அதிகாரங்கள் இல்லை”

கோபால் ஸ்ரீராம் : “நாடாளுமன்ற விவகாரங்களில் மாமன்னருக்கு அதிகாரங்கள் இல்லை”

637
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடாளுமன்றம் எப்போது கூட வேண்டும், எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற விவகாரங்களில் மலேசியாவின் அரசியல் அமைப்பு சட்டம் மாமன்னருக்கு எந்தவித அதிகாரங்களையும் வழங்கவில்லை.

இந்த சட்ட அம்சத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார், நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான கோபால் ஸ்ரீராம். அவர் கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி என்பதோடு மலேசிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான அம்சங்களில் நிபுணத்துவம் கொண்டிருக்கும் சட்ட அறிஞருமாவார்.

மாமன்னர் நேரடியாகப் பிரதமரிடம் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு கட்டளையிட முடியாது. அதேபோல, நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலையும் மாமன்னர் நிர்ணயிக்க முடியாது. அதற்கான அதிகாரங்களை அரசியலமைப்பு சட்டம் அவருக்குத் தரவில்லை என்பதையும் ஸ்ரீராம் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஊடகச் செய்தியின்படி, மாமன்னர் புதன்கிழமை (ஆகஸ்ட் 11) மொகிதின் யாசினுடன் நடத்திய சந்திப்பில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

இதுகுறித்துக் கருத்துரைக்கும்போதே ஸ்ரீராம் மேற்கண்டவாறு கூறினார்.

எனினும் எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிதான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அதற்கு முன்பாக நடக்காது என்றும் அறிவித்திருக்கிறார் தொடர்பு, பல்ஊடக அமைச்சர் சைபுடின் அப்துல்லா. இது குறித்த முன் அறிவிக்கைகளும் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.