Home நாடு மொகிதினுக்கு விருந்துபசரிப்பு வழங்கிய ஜோகூர் சுல்தான்

மொகிதினுக்கு விருந்துபசரிப்பு வழங்கிய ஜோகூர் சுல்தான்

695
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற்ற ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார், அதன் பின்னர் பிரதமர் மொகிதின் யாசினுக்கு தனது அரண்மனையில் மதிய உணவு விருந்துபசரிப்பு அளித்து கௌரவித்தார்.

“பிரதமரை இன்று விருந்துக்கு அழைத்தேன். நடப்பு அரசியல் விவகாரங்கள் குறித்த அவரின் கருத்துகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்” என ஜோகூர் சுல்தான் தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் புகைப்படங்களோடு பதிவிட்டார்.

ஜோகூர் சட்டமன்றக் கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியிலும் மொகிதின் கலந்து கொண்டார். மொகிதின் காம்பீர் சட்டமன்ற உறுப்பினருமாவார்.

#TamilSchoolmychoice

நம்பிக்கை வாக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் எதிர்நோக்கியிருக்கும் மொகிதின் யாசின், ஜோகூர் சுல்தானுடன் நடத்தியிருக்கும் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ஜோகூர் சுல்தானின் எச்சரிக்கை

இதற்கிடையில் நேற்று ஜோகூர் மாநிலத்தின் சட்டமன்றக் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் சுயநலத்தின் அடிப்படையில் நடந்து கொண்டாலோ, மாநிலத்தில் அதிகார மோதல்கள் நிகழ்ந்தாலோ, சட்டமன்றத்தைக் கலைத்து விடுவேன் என எச்சரித்துள்ளார்.

சுல்தானுக்கு மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் சட்டப்படி உண்டு. எனினும் மாநில அரசாங்கத்தின் ஆலோசனைப்படியே அவர் முடிவு செய்ய முடியும்.

இதைத் தொடர்ந்து சுல்தானின் எச்சரிக்கைக்கு ஏற்ப அந்த மாநிலத்தின் கட்சிகள் தொடர்ந்து ஒன்றாக ஒரே அரசாங்கமாக இயங்குவார்களா அல்லது மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கத் தயாராவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுல்தானின் எச்சரிக்கையையும் மீறி அம்னோ, பெரிக்காத்தான் நேஷனல் இடையிலான கூட்டணி முறிந்தால் அது, மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு வழிவகுக்கும்.

படங்கள் : நன்றி – ஜோகூர் சுல்தான் அதிகாரபூர்வ முகநூல் பக்கம்