கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 16) பிரதமர் பதவியிலிருந்து மொகிதின் யாசின் விலகுவார் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.
அதைத் தொடர்ந்து, பெர்சாத்து கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ம சங்கடத்தையும், தடுமாற்றத்தையும் எதிர்நோக்கியுள்ளனர்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்று குழம்பியிருக்கும் அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 15) காலையில் கோலாலம்பூர் பப்ளிக்கா வளாகத்தில் உள்ள பெரிக்காத்தான் நேஷனல் கட்சி அலுவலகத்தில் சந்திப்புக் கூட்டம் நடத்தி வருகின்றனர் என மலேசியாகினி இணைய ஊடகத்தின் செய்தி தெரிவித்தது.
2 பிரிவாக நிற்கும் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது இரண்டு பிரிவினர்களை உள்ளடக்கியதாகும்.
ஒரு பிரிவு பிகேஆர் கட்சியிலிருந்து பிரிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும். அஸ்மின் அலி, சுரைடா, எட்மண்ட் சந்தாரா போன்ற 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பெர்சாத்து கட்சியில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இரண்டாவது பிரிவு, பெர்சாத்து கட்சியை மகாதீரும் மொகிதினும் தொடக்கியபோது அம்னோவிலிருந்து பிரிந்து வந்தவர்கள். 2028 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள்.
இவர்கள் அனைவருக்கும் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன. ஒன்று அன்வார் இப்ராகிமுக்கு பிரதமராக ஆதரவு தருவது. அல்லது அம்னோவுக்கு ஆதரவு தருவது.
தங்களுக்குத் துரோகம் இழைத்து, ஆட்சியைக் கவிழ்த்த அம்னோவுக்கே மீண்டும் ஆதரவு தருவதா?
அல்லது தாங்கள் துரோகம் இழைத்து விட்டு பிரிந்து வந்த பிகேஆர் கட்சி-அதன் தலைவர் அன்வார் இப்ராகிமுடனும் மீண்டும் இணைவதா என்ற தடுமாற்றத்திலும் குழப்பத்திலும் இருக்கின்றனர், பிகேஆர் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
பெர்சாத்து கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தக் குழப்பம் இருக்கிறது. தங்களை ஆட்சியில் இருந்து கவிழ்த்த தாய்க் கட்சியான அம்னோவுக்கு ஆதரவு தருவதா அல்லது அன்வார் இப்ராகிம் தலைமைத்துவத்திற்கு ஆதரவு தருவதா என்ற குழப்பம்தான் அது!
இன்று காலையில் பப்ளிக்காவில் உள்ள தேசியக் கூட்டணி அலுவலகத்தில் காணப்பட்டவர்களில் கீழ்க்காணும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர் எனவும் மலேசியாகினி தெரிவித்தது.
- முஸ்தபா முகமட் (ஜெலி)
- முகமட் ரெட்சுவான் முகமட் யூசோப் (அலோர்காஜா)
- அகமட் பைசால் அசுமு (தம்புன்)
- முகமட் ரஷிட் ஹாஸ்னோன் (பத்து பகாட்)
- எட்மண்ட் சந்தாரா குமார் (சிகாமாட்)
- சைபுடின் அப்துல்லா (இண்ட்ரா கோத்தா)
- சுரைடா கமாருடின் (அம்பாங்)
- சேவியர் ஜெயகுமார் (கோலலங்காட்)
- லேரி சிங் (ஜூலாவ் – சுயேச்சை)