Home நாடு இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவைப் பட்டியல் தயார்! குவாந்தானில் இருந்து புறப்பட்டார்

இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவைப் பட்டியல் தயார்! குவாந்தானில் இருந்து புறப்பட்டார்

505
0
SHARE
Ad

குவாந்தான் : இன்று வியாழக்கிழமை குவாந்தான் சென்று தனது அமைச்சரவைப் பட்டியலை மாமன்னரின் பார்வைக்குச் சமர்ப்பித்திருக்கிறார் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி.

இன்று காலை 11.00 மணியளவில் இஸ்மாயில் சாப்ரி குவாந்தானிலுள்ள மாமன்னரின் இஸ்தானா அப்துல் அசிஸ் அரண்மனையை வந்தடைந்தார்.

பின்னர் அங்கிருந்து பிற்பகல் 1.40 மணியளவில் இஸ்மாயில் சாப்ரி கோலாலம்பூருக்குப் புறப்பட்டார்.

#TamilSchoolmychoice

தனது புதிய அமைச்சரவைக்கு மாமன்னரின் ஒப்புதலை இஸ்மாயில் சாப்ரி பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.

நாளை வெள்ளிக்கிழமையோ அல்லது அடுத்த சில நாட்களிலோ புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தேசிய தினத்திற்கு முன்பாக முழு அமைச்சரவையும் பதவியேற்று உடனடி செயல் நடவடிக்கைகளில் இறங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 25) மாமன்னரைச் சந்தித்து தனது அமைச்சரவைப் பட்டியலை பிரதமர் இஸ்மாயில் சாப்ரி சமர்ப்பிப்பார் என்ற ஆரூடங்கள் நிலவின.

ஆனால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை. மாறாக, மலேசிய அரசியலில் புதிய திருப்பமாக, பக்காத்தான் கூட்டணித் தலைவர்களை தனது அலுவலகத்தில் சந்தித்து, சுமார் 1 மணி நேரத்திற்கும் கூடுதலாக கலந்துரையாடினார் இஸ்மாயில் சாப்ரி.

அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை குவாந்தான் சென்று மாமன்னரைச் சந்தித்து தனது அமைச்சரவைப் பட்டியலைச் சமர்ப்பித்திருக்கிறார்.