Home Uncategorized விக்னேஸ்வரன் – “தேசிய தினத்தை குடும்ப விழாவாக முழு ஈடுபாட்டுடன் இணைந்து கொண்டாடுவோம்”

விக்னேஸ்வரன் – “தேசிய தினத்தை குடும்ப விழாவாக முழு ஈடுபாட்டுடன் இணைந்து கொண்டாடுவோம்”

795
0
SHARE
Ad

தேசிய தினம் எதிர்வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் விடுத்திருக்கும்  பத்திரிகை அறிக்கை

“தேசிய தினத்தை குடும்ப விழாவாக முழு ஈடுபாட்டுடன் இணைந்து கொண்டாடுவோம்”

நமது அன்பிற்குரிய நாட்டின் தேசிய தினம் எதிர்வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விமரிசையாகக் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த உன்னத தினம் ஒருமாதக் கொண்டாட்டமாக நடைபெறுகிறது.

இந்த நன்னாள் நெருங்கி வரும் இந்த வேளையில் இந்திய சமூகத்தினர் அனைவரும் தேசிய தினத்தைத் தங்களின் திருவிழாவாக, குடும்ப விழாவாக மதித்து முழு ஈடுபாட்டுடன் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

#TamilSchoolmychoice

காரணம், இந்த தேசிய தினத்திற்கும் நமது இந்திய சமுதாயத்திற்கும் நெருங்கிய தொடர்பு, உறவு இருக்கிறது. இந்த தேசிய தினம் என்பது இந்த நாட்டில் நமது வரலாற்றின் ஓர் அங்கமாகும். ஏதோ, அரசாங்க விழா போலவோ, நமக்குத் தொடர்பில்லாத ஒரு கொண்டாட்டம் போலவோ இதனை நாம் கருதக் கூடாது.

நமது நாடு இந்த அளவுக்கு செழிப்போடும், வளமையோடும் மேம்பாடுகளோடும் திகழ்வதற்கு நமது மூதாதையர்கள் அந்தக் காலத்தில் காடுகளிலும், மலைகளிலும் நாட்டைச் சீர்படுத்த வழங்கிய கடுமையான உழைப்புதான் காரணம்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது நாட்டின் செல்வச் செழிப்புக்கும், இயற்கை அழகுக்கும் அடிப்படையாகத் திகழும் இரப்பர் தோட்டங்கள், செம்பனைத் தோட்டங்கள் ஆகியவற்றிலும், நமது நாட்டின் பழமையான சாலைகளிலும், இரயில் தண்டவாளங்களிலும், நமது மூதாதையர்களின் இரத்தமும், வியர்வையும் கலந்த உழைப்பு இரண்டறக் கலந்திருக்கிறது.

1957-இல் நமது நாடு சுதந்திரத்திற்காகப் போராடியபோது அதிலும் நாம் முக்கியப் பங்கு வகித்தோம். சுதந்திரத்திற்கான பேச்சு வார்த்தைகளில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அரசியல் அமைப்பாக மஇகா செயல்பட்டது.

அப்போதைய மஇகா தேசியத் தலைவர் துன் சம்பந்தன் அவர்கள் நமது இந்திய சமூகத்தின் சார்பாக அந்தப் பேச்சு வார்த்தைகளில் பங்கு கொண்டு சுதந்திரப் பிரகடனத்திற்கான அதிகாரபூர்வ ஆவணங்களிலும் கையெழுத்திட்டார்.

அதைத் தொடர்ந்து நாட்டில் ஆட்சி அமைத்த தேசிய முன்னணி அரசாங்கத்திலும் மஇகா, 60 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு கொண்டு பல்வேறு வகைகளிலும் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உதவி புரிந்தது.

எனவே, இந்த தேசிய தினம் என்பது நமது இந்திய சமுதாயத்தின் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கொண்ட வரலாற்றின் ஒரு பகுதியாகும். இதன் கொண்டாட்டங்களின் ஒவ்வொரு அம்சத்திலும் நமது மூதாதையர்களின் உணர்வும், உழைப்பும், அவர்கள் இந்த நாட்டின் மீது காட்டிய பாசமும், விசுவாசமும் அடங்கியிருக்கிறது.

எனவே, இந்தக் கொண்டாட்டங்களில் நாமும் உணர்வுபூர்வமாகப் பங்கெடுப்போம். இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றிப் பறக்க விடுவோம். பயன்படுத்தும் கார்களிலும், வாகனங்களிலும் நமது தேசியக் கொடியைப் பொருத்தி நமது விசுவாசத்தையும், ஈடுபாட்டையும் காட்டுவோம்.

தேசியக் கொடி தாங்கிய சின்னங்களை, அதன் வண்ணங்களைக் கொண்ட ஆடைகளை அணிந்து நமது பங்கெடுப்பைக் காட்டுவோம்.

நமது இளைய சமுதாயத்தினருக்கு நமது மூதாதையர்கள் ஆற்றிய பங்களிப்பையும், அவர்களும் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக இணைந்து போராடிய வரலாற்றையும் எடுத்துரைப்போம். புரிய வைப்போம்.

இந்த தேசியதினக் கொண்டாட்டத்தில் முழுமையாக இணைந்து ஈடுபடுவதன் மூலம், தேசிய வளர்ச்சியிலும், தேசிய நீரோட்டத்திலும் இந்திய சமூகம் இதுவரை ஆற்றியிருக்கும் பங்களிப்பை மற்ற சகோதர  இனங்களுக்கும் உணர்த்துவோம்.

அனைவருக்கும் தேசிய தின வாழ்த்துகள்.

 டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்