அமைச்சரவையில் இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த நிகராளி – தமிழுக்கும் இலக்கியத்திற்கும் கவசமாகத் திகழும் தலைவர்
டத்தோஶ்ரீ எம்.சரவணனுக்கு எழுத்தாளர் சங்கம் வாழ்த்து
கோலாலம்பூர்: அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில், மலேசிய மனித வள அமைச்சராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ம.இ.கா.வின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் அவர்களுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அதன் தலைவர் பெ.இராஜேந்திரன் குறிப்பிட்டார்.
ஏற்கனவே ஏற்றிருந்த மனிதவள அமைச்சு மீண்டும் அவருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது அவரது கடந்தகால பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.
நம் சமுதாயத்தை பிரதிநிதிக்கும் ஒரேயொரு இந்தியராக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்கள், ஒட்டுமொத்த இந்தியர்களின் நலன்பேணும் தலைவராகத் திகழ்வார் என்பதற்கு அவரது கடந்த கால சேவைகள் சான்றாக விளங்குகிறது என்று பெ.இராஜேந்திரன் குறிப்பிட்டார்.
மனித வள அமைச்சராக பொறுப்பேற்றிருந்த சூழ்நிலையிலும் ஒட்டுமொத்த இந்தியர்களின் நலனைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வோடு அவர் ஆற்றிவந்த பணிகளை இந்திய சமுதாயம் அறியும்.
குறிப்பாகத் தமிழுக்காகவும் தமிழ் சார்ந்த முன்னெடுப்புகளுக்காகவும் அவர் வழங்கி வருகின்ற முக்கியத்துவத்தை சமுதாயம் அறியும். மனிதவள அமைச்சர் என்கிற வகையில், அமைச்சுப் பணியை மிகச் சிறப்பாக மேற்கொள்கின்ற அதேவேளையில் சமுதாயத்தின் இதர பிரச்சினைகளையும் கவனிக்கும் அமைச்சராக அவர் பணியாற்றி வருகிறார்.
இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை பொறுத்தவரை மிக தாராள மனத்துடனும் தீவிர அக்கறையுடனும் அவர் ஆதரவு கரம் நீட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக மலேசியத் எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு என்றும் வற்றாத ஆதரவையும் நிதி ஒதுக்கீட்டையும் வழங்க கூடிய மனிதராக அவர் திகழ்ந்து வந்திருக்கின்றார்.
இந்த நாட்டில் நடைபெறும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு உதவுவதையும் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மூக்கமூட்டி ஆதரவுக்கரம் நீட்டுவதையும் தம் அன்றாட பணிகளில் குறிப்பிடத்தக்கதாக அமைத்துக் கொண்டு இயங்குவது அவரின் தனிச்சிறப்பு.
சரவணன் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்று இருப்பது இந்திய சமுதாயத்திற்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய வாய்ப்பாகும். இந்தியர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றி, சமுதாயத்தின் ஒட்டுமொத்த நிகராளி என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அவரது சேவைகள் அமையும் என்றும் இராஜேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.