Home கலை உலகம் திரைப்படப் பாடலாசிரியர் – அதிமுக பிரமுகர் – புலமைப் பித்தன் காலமானார்

திரைப்படப் பாடலாசிரியர் – அதிமுக பிரமுகர் – புலமைப் பித்தன் காலமானார்

827
0
SHARE
Ad

சென்னை: தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களில் இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்கள் படைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவரான புலமைப் பித்தன் தனது 86-வது வயதில் உடல் நலக் குறைவால் காலமானார்.

இன்று புதன்கிழமை (செப்டம்பம்பர் 8) காலை 9.33 மணி அளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் காலமானார்.

எம்ஜிஆர் நடித்த படங்களில் பல பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். அதில் பெரும்பாலானவை மிகப் பிரபலமாக பட்டி தொட்டியெங்கும் ஒலித்தவையாகும்.

#TamilSchoolmychoice

தமிழக சட்ட மேலவையின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்த புலமைப்பித்தன் எம்ஜிஆரின் அன்புக்கும், அபிமானத்திற்கும் பாத்திரமானவர். அதன் காரணமாக அவருக்கு தமிழக அரசவைக் கவிஞர் பதவியையும் எம்ஜிஆர் அவருக்கு வழங்கினார்.

புலமைப் பித்தனின் இயற்பெயர் இராமசாமி என்பதாகும்.

இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்கள் எழுதியவர்

எம்ஜிஆருடன் இளம் வயது புலமைப் பித்தன்

அதிகமான பாடல்கள் எழுதியவர் இல்லை என்றாலும், புலமைப்பித்தன், எழுதிய ஒவ்வொரு பாடலும் இலக்கியத் தரமும் தத்துவ வாதங்களும் நிறைந்திருக்கும்.

அவர் எழுதிய முதல் பாடலான “நான் யார்? நீ யார்?” என்ற பாடலே அதற்கு சிறந்த உதாரணமாகும். எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றது.

அதைத் தொடர்ந்து நிறைய பாடல்கள் எம்ஜிஆர் படங்களுக்காக எழுதினார். அவரின் சிறந்த பாடல்களில் சில பின்வருமாறு:

  • “சிரித்து வாழ வேண்டும்  பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே”
  • இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்
  • சாதிமல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ் பாச்சரமே (அழகன்)
  • பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
  • ஆயிரம் நிலவே வா! ஓராயிரம் நிலவே வா

இவ்வாறாக அவரின் அற்புதமான, அழகியல் தோய்ந்த பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எம்ஜிஆருக்காக அதிமுகவிலும் இணைந்து பாடுபட்ட  புலமைப் பித்தனுக்கு பல பதவிகள் வழங்கி அழகு பார்த்தார் எம்ஜிஆர்.

கோயம்புத்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட புலமைப் பித்தனுக்கு தமிழக அரசவைக் கவிஞர் பதவியையும் எம்ஜிஆர் வழங்கினார்.

பின்னர் ஜெயலலிதாவுக்காகவும் தீவிர ஆதரவு காட்டினார் புலமைப்பித்தன். ஜெயலலிதாவுக்கு பல்வேறு அறிக்கைகள் தயாரித்துக் கொடுத்தவர் புலமைப்பித்தன் என்றும் கூறுவார்கள்.

அண்மையக் காலங்களில் அவர் தமிழக முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துகளைக் கூறி வந்தார்.

ஸ்டாலின் இரங்கல்

புலமைப் பித்தனின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அதிமுக பிரமுகர்களும் புலமைப் பித்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, நேரில் சென்றும் அவரின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

புலமைப் பித்தன் நல்லுடலுக்கு சசிகலாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal