Home நாடு நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர்கள் இனி 3 பேர்

நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர்கள் இனி 3 பேர்

771
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட அம்னோவின் தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், அந்த நியமனத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஒரு பக்கம் அவர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கை எதிர்நோக்குகிறார் என்பதால் அவருக்கு பதவி கொடுக்கப்படக்கூடாது என்ற வாதங்கள் எழுந்தன.

இன்னொரு பக்கம், பெர்சாத்து கட்சி அவரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றது என்ற தகவல்களும் வெளியாகின.

#TamilSchoolmychoice

இந்நிலையில் நாடாளுமன்ற அவைத் துணைத் தலைவருக்கான தேர்தலே அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

தற்போது இருக்கும் இரண்டு நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர்களுக்குப் பதிலாக 3 பேர்களை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த மூவரில் ஒருவர் எதிர்கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார்.

அவைத் துணைத் தலைவர் பதவிவியிலிருந்து கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி அசாலினா ஒத்மான் சைட் விலகினார். அவருக்குப் பதிலாக புதிய துணைத் தலைவர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) தேர்ந்தெடுக்கப்படுவார் என நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், பிரதமர் துறையின் சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர் வான் ஜூனாய்டி, துணைத் தலைவருக்கான தேர்தலை ஒத்தி வைக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அவையின் துணைத் தலைவர்களாக 3 பேர் நியமிக்கப்படும் வகையில் மலேசிய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்றும் அதற்கேற்பவே, அவைத் துணைத் தலைவருக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக வான் ஜூனாய்டி அறிவித்தார்.

இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றபோது, அவையின் தலைவர் அசார் அசிசான் ஒரு கட்டத்தில் தற்காலிக துணைத் தலைவராகப் பணியாற்ற அசாலினாவுக்கு அழைப்பு விடுத்தார்.

அசாலினாவும் அந்த அழைப்பை ஏற்று நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராக கடமையாற்றினார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal


 

Comments