Home நாடு “மித்ராவை முடக்கும் விதமாக தலைமை இயக்குநர் பதவி தகுதியைக் குறைத்தார் ஹாலிமா – வேதமூர்த்தி குற்றச்சாட்டு

“மித்ராவை முடக்கும் விதமாக தலைமை இயக்குநர் பதவி தகுதியைக் குறைத்தார் ஹாலிமா – வேதமூர்த்தி குற்றச்சாட்டு

647
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இந்தியர்களை சமூக-பொருளாதார அடிப்படையி  ல் மேம்படுத்துவதற்காகச் செயல்படும் மித்ராவை முடக்கும் விதமாக அதன் தலைமை இயக்குநர் பதவியை ‘ஜூசா பி’ தகுதி நிலையிலிருந்து ‘கிரேட் 54’க்கு ஹலிமா இறக்கம் செய்துள்ளார் என்று முன்னாள் அமைச்சரும் செனட்டர் பொன்.வேதமூர்த்தி குற்றம் சுமத்தி உள்ளார்.

மித்ரா 2020-ஆம் ஆண்டுக்காக திட்டமிட்ட புதிய முயற்சிகள் வெற்றி பெறுவதைத் தடுக்கவே ‘ஜூசா பி’ தகுதி நிலையிலான தலைமை இயக்குநர் பதவி, ‘ஜூசா சி’ தகுதி நிலையிலான துணை தலைமை இயக்குநர் பதவிகளை முறையே கிரேட் 54-ற்கும் கிரேட் 52-க்கும் ஹலிமா இறக்கம் செய்துள்ளார்.

தான் அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் இந்திய சமுதாயத்தை தேசிய பொருளாதார மேம்பாட்டில் இணைத்துக் கொள்ளும் விதமாக முக்கியமான அமைச்சுகளுடன் மித்ரா இணைந்து செயல்பட்டது. சமுதாயத்திற்கான திட்டங்களை முன்னெடுத்து செல்ல ஜூசா நிலையிலான திட்டமிடும் ஆற்றலும் அறிவும் வாய்க்கப்பெற்ற அரசாங்க அதிகாரி மிகவும் தேவை. மகாலிங்கம் தலைமை இயக்குநராக பதவி ஏற்கும் முன் சுமார் ஓராண்டு காலமாக துணை தலைமை இயக்குநராக செயல்பட்டார். அத்துடன் அவர் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி நிதி மற்றும் நிறுவன துறைகளின் பின்னணியையும் கொண்டிருந்தார் எனவும் வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அரசாங்க சேவையில், அமைச்சுக்களின் தலைமை செயலாளர்கள் ஜூசா (JUSA) தகுதியைக் கொண்ட ஒரு மூத்த அதிகாரி அவரை அணுகும்போது அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பது இரகசியமல்ல.
அமைச்சர் என்னும் முறையில் பொன் வேதமூர்த்தி வகுக்கும் திட்டங்களை தலைமை இயக்குநரும் அவரின் குழுவினரும் நிறைவேற்றுவார்கள். 2020-ஆம் ஆண்டில் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ், ஜிஇ, சீமன்ஸ், மைக்ரோசாஃப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அங்கெல்லாம் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாத இந்திய இளைஞர்களை தொழில்திறன் பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப வேதமூர்த்தி திட்டமிட்டிருந்தார். அவ்வாறு பயிற்சி பெறும் மாணவர்கள் எதிர்காலத்தில் உயர் வருமானம் பெறும் வேலைவாய்ப்புகளைப் பெறமுடியும். அதன் மூலம் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

“எனக்குப் பிறகு பொறுப்பேற்ற ஹலிமா, இந்த திட்டங்கள் அனைத்தும் திட்டமிடப்பட்டு செயல்படுத்தத் தயாராக இருப்பதை பார்த்திருக்க வேண்டும். இத்தகையத் திட்டங்கள் யாவும் நிறைவேற்றப்படுவதற்கு வழிவகை கண்டிருக்க வேண்டும். மாறாக, தலைமை இயக்குநரை பதவி இறக்கி பன்னாட்டு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பையும் அமைச்சுகளுடனான ஒருங்கிணைப்பையும் கெடுத்து தடைக்கல்லை ஏற்படுத்துகிறார். மித்ரா இப்பொழுது அதிகாரத்தை இழந்து முடங்கி இருப்பதற்கான நிலையை ஏற்படுத்திய ஹலிமா அதற்கான காரணத்தை இன்றுவரை தெரிவிக்கவில்லை” என்று பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.