கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) ஜென் ஸெட் இளைஞர் குழுவினர் (Pemuda Gen Z) மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில், மித்ராவுக்கு எதிராக ஊழல் புகார்களை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்தனர்.
அண்மையக் காலமாக மித்ராவிலும், அதன் முந்தைய அமைப்பான செடிக்கிலும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக பல தரப்புகளில் இருந்தும் புகார்கள் – குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்படும் என ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் பொன்.வேதமூர்த்தி, “ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா சாதிக், மித்ரா நிதியைக் கையாண்டதில் முறைகேடுகள் புரிந்தார் என ஊடகங்களில் வெடித்த சர்ச்சைகள், புகார்களைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்ய முன்வந்திருக்கும் ஜென் ஸெட் இளைஞர் குழுவினரின் ஆர்வத்தையும், துணிச்சலையும் பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.
“அந்த இளைஞர் குழுவினர் எதிர்கால சந்ததியினரின் நலன்களைக் கவனத்தில் கொண்டு இந்தப் புகார்களைச் செய்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஹாலிமா என்னுடன் இணைந்து ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்ய முன்வருவாரா என கடந்த வாரத்தில்தான் நான் ஹாலிமாவுக்கு சவால் விடுத்திருந்தேன். எனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆதாரமில்லாத கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுத்து நேரடியாக என்னுடன் இணைந்து ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்ய முன்வரும்படியும் அவருக்கு சவால் விடுத்திருந்தேன். ஆனால் இன்றுவரை அவர் அதற்கு பதிலளிக்கவில்லை” என்று வேதமூர்த்தி சுட்டிக் காட்டினார்.
“அடுத்த வாரம் திங்கட்கிழமை எனது அடுத்த கட்ட நடவடிக்கையை நான் அறிவிப்பேன்” என்றும் மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஒற்றுமைத் துறை அமைச்சருமான வேதமூர்த்தி கூறியிருக்கிறார்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal