Home நாடு மஇகா மகளிர் பகுதி தலைவி : வெல்லப் போவது உஷா நந்தினியா? மோகனாவா?

மஇகா மகளிர் பகுதி தலைவி : வெல்லப் போவது உஷா நந்தினியா? மோகனாவா?

664
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகாவின் இளைஞர், மகளிர், புத்ரா, புத்திரி பிரிவுகளுக்கான பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) மஇகா தலைமையகத்தில் நடைபெற்றது.

மஇகா மகளிர் பகுதியின் தலைவிக்கான தேர்தலில் நடப்புத் தலைவி ஜே.உஷா நந்தினியை எதிர்த்து அந்தப் பிரிவின் முன்னாள் தலைவி மோகனா முனியாண்டி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

2013 முதல் 2018 வரை மஇகா மகளிர் பிரிவின் தலைவியாக மோகனா செயலாற்றினார்.

#TamilSchoolmychoice

49 வயதான உஷா 2003 முதல் 2013 வரை புத்திரி தலைவியாகப் பதவி வகித்தார். அதன் பின்னர் 2018-இல் மகளிர் பிரிவு தலைவியாக ஏகமனதாகத் தேர்வு பெற்றார்.

2018 வரை மகளிர் தலைவியாக இருந்த 45 வயது மோகனா முனியாண்டி அந்த ஆண்டில்  மீண்டும் அந்தப் பதவியைத் தற்காக்காமல் ஒதுங்கிக் கொண்டார்.

எனினும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்பியுள்ளார்.

மகளிர் பிரிவுக்கான தேர்தல்கள் எதிர்வரும் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறும்.

இதற்கிடையில் மஇகாவின் மற்ற தேசிய நிலைப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 19-ஆம் தேதியும் அதற்கான தேர்தல்கள் நவம்பர் 26-ஆம் தேதியும் நடைபெறும்.

மஇகா மகளிர் பகுதித் தலைவியாக 2018 வரை செயல்பட்ட மோகனா முனியாண்டி, மஇகா-தேசிய முன்னணி சார்பில் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியிலும் 2018 பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனாலும் அந்த முயற்சியில் தோல்வி கண்டார்.

அதன் பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். அவருக்குப் பதிலாக ஒரு வழக்கறிஞரான உஷா நந்தினி மகளிர் பகுதித் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்வரும் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் மகளிர் பிரிவு தலைவிக்கான போட்டியில் வெல்லப் போவது யார் என்பதைக் காண மஇகாவினர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal